நிபா வைரசுக்கு மேலும் ஒருவர் பலி; கேரளாவின் 6 மாவட்டங்களில் உஷார்
நிபா வைரசுக்கு மேலும் ஒருவர் பலி; கேரளாவின் 6 மாவட்டங்களில் உஷார்
ADDED : ஜூலை 15, 2025 06:07 AM

பாலக்காடு : கேரளாவில், நிபா வைரசுக்கு இரண்டாவது நபர் பலியானதை அடுத்து, பாலக்காடு, மலப்புரம் உட்பட ஆறு மாவட்டங்கள் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளன.
வவ்வால், பன்றி உட்பட விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நிபா வைரஸ் பரவுகிறது. இது, மூளை மற்றும் சுவாச மண்டலத்தை தாக்கி, உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
கேரளாவின் மலப்புரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது.
வைரஸ் அறிகுறிகளுடன் பாலக்காட்டைச் சேர்ந்த 58 வயது நபர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் பலியானார்.
அவரது ரத்த மாதிரிகளை பரிசோதித்ததில், நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. முன்னதாக, மலப்புரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி 10 நாட்களுக்கு முன் பலியான நிலையில், தற்போது இரண்டாவது நபர் பலியாகி உள்ளார்.
இதற்கிடையே, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் இந்நோய் அறிகுறிகளுடன் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் நிபா வைரசால் பலியானோர் மற்றும் அறிகுறி உள்ளோருடன் தொடர்பில் இருந்த 500க்கும் மேற்பட்டோர், தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், வயநாடு, கண்ணுார், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் உஷார்நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.