ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பார்லி. கூட்டுக்குழுவில் பிரியங்கா?
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பார்லி. கூட்டுக்குழுவில் பிரியங்கா?
UPDATED : டிச 18, 2024 04:21 PM
ADDED : டிச 18, 2024 04:04 PM

புதுடில்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக ஆய்வு செய்யும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவில், இடம்பெற வயநாடு எம்.பி., பிரியங்காவின் பெயரை காங்கிரஸ் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்த வகை செய்யும் மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அரசியல் சட்ட திருத்த மசோதா என்பதால், விதிப்படி ஓட்டெடுப்பு நடந்தது. ஆதரவாக 269 பேர், எதிர்த்து 198 பேர் ஓட்டளித்தனர். பின், ஜே.பி.சி., என்றழைக்கப்படும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. இந்த குழுவில், இடம்பெறுவோரின் பட்டியலை வழங்கும்படி மத்திய அரசு கூறியிருந்தது. இக்குழுவில் அதிகபட்சம் 31 எம்.பி.,க்கள் இடம்பெறலாம். அதில் 10 பேர் ராஜ்யசபா எம்.பி.,க்கள் அடங்குவர்.
இந்நிலையில், லோக்சபாவில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ்,வயநாடு எம்.பி., பிரியங்காவின் பெயரை பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் சுக்தியோ பகத் சிங் ஆகியோரின் பெயர்களையும், அக்கட்சி பரிந்துரைத்து உள்ளதாக தெரிகிறது.
திரிணாமுல் சாகேத் கோகாய் மற்றும் கல்யாண் பானர்ஜி
உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அனில் தேசாய்
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியில் அவரது மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேவின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
ஆளும் பா.ஜ.,வுக்கு 240 எம்.பி.க்களும் . காங்கிரசுக்கு 99 எம்பிக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.