ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா; லோக்சபாவில் டிச.,16ல் தாக்கல்
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா; லோக்சபாவில் டிச.,16ல் தாக்கல்
UPDATED : டிச 14, 2024 11:46 AM
ADDED : டிச 14, 2024 10:45 AM

புதுடில்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா டிச.,16ல் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மசோதாவை தாக்கல் செய்கிறார்.
லோக்சபா, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆராய்ந்து, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழுவினர் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, இந்தாண்டு மார்ச் மாதத்தில் இந்தக் குழு தன் அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தாக்கல் செய்தது.
இந்த அறிக்கையை, மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பரில் ஏற்றுக் கொண்டது. இதைத் தொடர்ந்து, ஒரே நாடு; ஒரே தேர்தல் தொடர்பான மசோதா தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா டிச.,16ல் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மசோதாவை தாக்கல் செய்கிறார்.
இதற்காக, மூன்று சட்டப் பிரிவுகளில் திருத்தம், 12 புதிய சட்டப் பிரிவுகள் சேர்ப்பு மற்றும் யூனியன் பிரதேசங்களான டில்லி, ஜம்மு - காஷ்மீர், புதுச்சேரி ஆகியவற்றுக்கான சட்டங்களில் திருத்தம் என, மொத்தம் 18 சட்டத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். இந்த மசோதாவும் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.