'ஒரே நாடு, ஒரே தேர்தல்' அறிக்கை: மத்திய அரசின் செலவு ரூ.95,344 மட்டுமே!
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' அறிக்கை: மத்திய அரசின் செலவு ரூ.95,344 மட்டுமே!
ADDED : ஜன 27, 2025 03:51 PM

புதுடில்லி:'ஒரே நாடு, ஒரே தேர்தல்' அறிக்கைக்காக, மத்திய அரசு ரூ.95,344 மட்டுமே செலவிட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு தயாரித்த 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' அறிக்கையை தயார் செய்வதற்கு எவ்வளவு தொகை செலவிடப்பட்டது, உறுப்பினர்களுக்கு பணம் வழங்கப்பட்டதா என்ற கேள்விகளை எழுப்பி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவுக்கு பதில் அளித்த மத்திய அரசு, ரூ.95,344 மட்டுமே செலவிட்டதாக தெரிவித்துள்ளது.
194 நாட்களில் இறுதி செய்யப்பட்ட இந்த அறிக்கை, ஒரே நேரத்தில் தேர்தல்களின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தது.
இது குறித்து சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை இந்த அறிக்கை மதிப்பிட்டது. இந்த அறிக்கையில் பணியாற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு செப்டம்பர் 2, 2023 அன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது முடிவுகளை 194 நாட்களில் தயார் செய்து, மார்ச் 14, 2024 அன்று சமர்ப்பித்தது.
இந்தக் குழு தினமும் வேலை செய்ததாகக் கருதினால், ஒரு நாளைக்கு தோராயமாக ரூ.491 செலவாகும். வேலை செய்யாத நாட்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டால், ஒரு நாளுக்கான செலவு அதிகமாக இருக்கலாம்.
தகவல், கணினி மற்றும் தொலைத்தொடர்புஅலுவலக செலவுகள்,இயந்திரங்கள் மற்றும்
டிஜிட்டல் உபகரணங்கள், பயணச் செலவுகள்,அச்சிடுதல் மற்றும் வெளியீடு
ஆகியவற்றிற்கு பணம் அளிக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள், பணம் எதுவும் வாங்காமல், கவுரவ அடிப்படையில் அறிக்கைக்கு பங்களித்தனர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.