ADDED : மார் 15, 2026 01:15 AM

புதுடில்லி: ஸ்கூட்டர் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழந்தார். காயம் அடைந்த இருவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மத்திய டில்லி ஐ.டி.ஓ., மேம்பாலத்தில் நேற்று முன் தினம் நள்ளிரவு, ஒரு ஸ்கூட்டரில் மூன்று பேர் சென்றனர். பின்னால் வந்த லாரி, ஸ்கூட்டரை முந்திச் சென்ற போது, பக்கவாட்டில் மோதியது. ஸ்கூட்டரில் இருந்த மூவரும் துாக்கி வீசப்பட்டனர். லாரி டிரைவர் வண்டியை நிறுத்தாமல் சென்று விட்டார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் மூவரையும் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில் ஒருவர் உயிரிழந்து விட்டதை, டாக்டர்கள் உறுதி செய்தனர். மற்ற இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். மூவர் குறித்த விபரங்களும் உடனடியாக தெரியவில்லை.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விபத்து ஏற்படுத்திய லாரியை கண்டுபிடித்தனர். விசாரணை நடக்கிறது.
