ரூ.500 கோடி கொடுப்பவர்களே முதல்வராகிறார்கள்; சித்துவின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு
ரூ.500 கோடி கொடுப்பவர்களே முதல்வராகிறார்கள்; சித்துவின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு
ADDED : டிச 07, 2025 02:32 PM

சண்டிகர்: 'முதல்வர் இருக்கையில் அமர்வதற்காக கொடுக்க ரூ.500 கோடி பணம் எங்களிடம் இல்லை. பெட்டி நிறைய பணம் கொடுப்பவர் தான் முதல்வர் ஆகிறார்கள்,' என்று பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி கவுர் குற்றம்சாட்டியுள்ளார்.
பஞ்சாப் சட்டசபைக்கு 2027ம் ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆம் ஆத்மி அரசின் ஆட்சியில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவியுமான நவ்ஜோத் கவுர் சித்து நேற்று கவர்னர் குலாப் சந்த் கட்டாரியாவை சந்தித்து பேசினார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் கணவர் சித்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்ததாவது; நாங்கள் எப்போதும் பஞ்சாப் மற்றும் பஞ்சாபி மொழிக்காக தான் பேசுவோம். முதல்வர் இருக்கையில் அமர்வதற்காக கொடுக்க ரூ.500 கோடி பணம் எங்களிடம் இல்லை. பெட்டி நிறைய பணம் கொடுப்பவர் தான் முதல்வர் ஆகிறார்கள். எந்தக் கட்சியாவது அவருக்கு அதிகாரம் கொடுத்தால், அவர் நிச்சயமாக பஞ்சாப்பை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார்.
பஞ்சாப் காங்கிரஸில் ஏற்கனவே உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. ஏற்கனவே, 5 தலைவர்கள் முதல்வர் பதவிக்காக போட்டியிட்டு வருகின்றனர். அவர்கள் காங்கிரஸைத் தோற்கடிப்பதில் உறுதியாக உள்ளனர். கட்சியின் தலைமை இதைப் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும். அதேவேளையில், சித்து காங்கிரஸ் தலைமையுடனும், கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்காவுடன் மிகவும் நெருக்கமாக உள்ளார். ஆனால், உட்கட்சி பூசலுக்கு மத்தியில் அவர்கள் சித்துவை முன்னேறி வர விடுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.
மீண்டும் சித்து பாஜவில் இணைவாரா? என்பது குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. காங்கிரஸ் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால், சித்து மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்புவார். ஏனெனில், தற்போது அவர் நன்கு பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். மேலும் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார், என்று கூறினார்.
முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் தலைவரான சித்து, கடந்த பல மாதங்களாக கட்சியின் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளில் ஈடுபடவில்லை. 2024ல் நடந்த லோக்சபா தேர்தலிலும் அவர் பிரச்சாரம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

