புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டது ஓங்கல்லுார் தளி மகாதேவர் கோவில்
புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டது ஓங்கல்லுார் தளி மகாதேவர் கோவில்
ADDED : பிப் 03, 2026 01:05 AM

பாலக்காடு: வரலாற்று சிறப்புமிக்க, ஓங்கல்லுார் மஞ்சளுங்கல் தளி மகாதேவர் கோவில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி அருகே உள்ளது ஓங்கல்லுார். இங்குள்ள மஞ்சளுங்கல் தளி மகாதேவர் கோவிலின் அபூர்வ சிற்ப வேலைப்பாடுகள், பழமை மாறாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என அறங்காவலர் குழு கோரிக்கை விடுத்து வந்தனர்.
உயர்மட்ட குழு
தற்போது, இதை ஏற்ற மத்திய அரசு, இந்த கோவிலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த புராதன சின்னமாக அறிவித்துள்ளது. இதற்கான இறுதி உத்தரவை மத்திய கலாசார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதை தொடர்ந்து, இக்கோவில் மத்திய தொல்லியல் துறையின் நேரடி பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்படுகிறது.
கடந்தாண்டு ஜூலையில், இக்கோவிலை புராதன சின்னமாக அறிவிப்பதற்கான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது. பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பின், ஜன., 30ல், மத்திய கலாசார அமைச்சகம் இதற்கான இறுதி உத்தரவை பிறப்பித்தது.
பழங்கால நினைவுச் சின்னங்கள் சட்டம் - 1958ன் கீழ், இந்த உயரிய அந்தஸ்து வழங்கப் பட்டுள்ளது.
நேற்று முன்தினம், இந்திய தொல்லியல் துறையின் தெற்கு மண்டல இயக்குநர் டாக்டர் நவரத்னகுமார் பாக் மற்றும் கேரள கண்காணிப்பாளர் விஜயன் நாயர் தலைமையிலான, 12 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவினர் கோவிலுக்கு வருகை தந்தனர்.
எல்லை சுவர்
கோவிலை பொறுப்பேற்றுக் கொள்வதற்கான அதிகாரப்பூர்வ ஆவணங்களை, அவர்கள் கோவில் கமிட்டியிடம் ஒப்படைத்தனர். கோவில் தந்திரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.
தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
முதற்கட்டமாக, கோவில் வளாகத்தை சுற்றி பாதுகாப்பு வேலிகள் மற்றும் எல்லை சுவர்கள் அமைக்கப்படும். பழமை மாறாத வகையில் பராமரிப்பு பணிகள், தொல்லியல் துறை நிபுணர்களால் மேற்கொள்ளப்படும். திருச்சூர் அலுவலகத்தில் இது குறித்த விரிவான ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

