ஆன்லைன் மோசடி; மக்களே உஷாராக இருங்க; பிரதமர் மோடி எச்சரிக்கை
ஆன்லைன் மோசடி; மக்களே உஷாராக இருங்க; பிரதமர் மோடி எச்சரிக்கை
ADDED : அக் 27, 2024 12:51 PM

புதுடில்லி: 'சமூகத்தில் அனைத்து பிரிவினரும் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதில் மக்கள் உஷாராக இருக்க வேண்டும்' என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
இன்று நடந்த மன்கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது:
ஆன்லைன் மோசடியில் மக்கள் உஷாராக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தை சமாளிக்க மாநில அரசுகளுடன் புலனாய்வு அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. எந்த புலனாய்வு அமைப்பும், இது போன்ற விசாரணைக்காக உங்களை தொலைபேசியில் அழைக்காது. வீடியோ அழைப்பும் போலீசாரிடம் இருந்து வராது. டிஜிட்டல் அரெஸ்ட் என்று எதுவுமே கிடையாது. அப்படி யாரேனும் போனில் அழைத்தால் அது மோசடி என்று புரிந்து கொள்ள வேண்டும்.அத்தகைய சைபர் கிரைம் குற்றங்களை தெரிவிக்க மக்கள் 1930 என்ற எண்ணை டயல் செய்யுங்கள்.
வீடியோ கேம்கள்
சோட்டா பீம், கிருஷ்ணா, மோட்டு-பட்லு, பால் ஹனுமான் ஆகிய இந்திய அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கும், வீடியோ கேம்களுக்கும் உலகம் முழுக்க ரசிகர்கள் உள்ளனர். அக்., 28ல் உலக அனிமேஷன் தினத்தைக் கொண்டாடுவோம், அனிமேஷனில் இந்தியாவை அதிகார மையமாக மாற்ற உறுதியேற்போம். இந்திய விளையாட்டுகளும் பிரபலமடைந்து வருகின்றன. பள்ளி குழந்தைகள் பலர் எழுத்துக்கலையில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அதிசயங்கள்
தன்னிறைவு பெற்ற இந்தியா எல்லாத் துறைகளிலும் அதிசயங்களை செய்து வருகிறது. முந்தைய காலத்தில், இந்தியா ஏதாவது தொழில்நுட்பத்தை உருவாக்குகிறது என்று கூறினால் நம்ப மாட்டார்கள். பலர் கிண்டல் செய்வார்கள். ஆனால் இன்று இந்தியா உருவாக்கும் தொழில்நுட்பங்களை கண்டு வியந்து பார்க்கிறார்கள். நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல்நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது. இவ்வாறு பிரதமர் பேசினார்.