ஆன்லைனில் ரூ.80.15 லட்சம் மோசடி; பாலக்காடு வாலிபர் கைது
ஆன்லைனில் ரூ.80.15 லட்சம் மோசடி; பாலக்காடு வாலிபர் கைது
ADDED : மே 02, 2025 07:05 AM

பாலக்காடு : பாலக்காட்டில், வீட்டில் இருந்தபடியே 'ஆன்லைன்' வாயிலாக பணம் சம்பாதிக்கலாம் என, நம்ப வைத்து, 80.15 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை, சைபர் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவரிடம், 'ஆன்லைன்' வாயிலாக 'ஷேர் டிரேடிங்' செய்து பணம் சம்பாதிக்கலாம் என கூறி ஏமாற்றி, 80.15 லட்சம் ரூபாய் பணம் பறிக்கப்பட்டதாக, பாலக்காடு சைபர் குற்றப் பிரிவு போலீசுக்கு புகார் வந்தது.
அதன் அடிப்படையில், மாவட்ட எஸ்.பி., அஜித்குமாரின் அறிவுரையின்படி, டி.எஸ்.பி., பிரசாத் மேற்பார்வையில், சைபர் குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் சசிக்குமார் தலைமையில் நடத்திய விசாரணைக்கு பின், பாலக்காடு பட்டாணித்தெருவை சேர்ந்த பசீல், 32, என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
இன்ஸ்பெக்டர் சசிக்குமார் கூறியதாவது:
கடந்த, 2024 நவம்பர் மாதம் இந்த ஆன்லைன் மோசடி சம்பவம் நடந்துள்ளது. வாட்ஸ்ஆப் வழியாக, புகார்தாரரை தொடர்பு கொண்டு வீட்டிலிருந்தபடியே 'ஷேர் டிரேடிங்' செய்து அதிகமாக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி, 'டெபாசிட்' தொகையாக, 80.15 லட்சம் ரூபாயை பசீல் வாங்கியுள்ளார்.
உறுதியளித்தவாறு 'ேஷர் டிரேடிங்' செய்யவில்லை. இதையடுத்து, ஏமாற்றப்பட்டதும், பண மோசடிக்காக வங்கிக் கணக்கு துவங்கி, அதில் பெற்ற பணத்தில், 20 லட்சம் ரூபாயை பாலக்காடு டவுனில் உள்ள வேறு வங்கி கணக்குக்கு பசீல் பரிமாற்றம் செய்துள்ளதும் விசாரணையில் தெரிந்ததுமேலும், மோசடிக்காக பயன்படுத்திய வங்கிக் கணக்குக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து, 9 புகார்கள் பதிவாகியுள்ளது. இவ்வழக்கில், பசீலை தவிர மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற மோசடிகள் நடந்தாலோ, மோசடி முயற்சி நடப்பது தெரிந்தாலோ, உடனடியாக தேசிய சைபர் குற்றப்புகார் பிரிவின் '1930' என்ற எண் அல்லது மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.