ஆன்லைன் சூதாட்டம்; 3 நாட்களில் 2 உயிரிழப்புகள்; என்ன செய்கிறது தமிழக அரசு?: கேட்கிறார் அன்புமணி
ஆன்லைன் சூதாட்டம்; 3 நாட்களில் 2 உயிரிழப்புகள்; என்ன செய்கிறது தமிழக அரசு?: கேட்கிறார் அன்புமணி
ADDED : ஜன 08, 2024 01:15 PM

சென்னை: ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் இரு முறை நிறைவேற்றப்பட்டும் கூட, திறமை சார்ந்த விளையாட்டுகளான ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்றவற்றை அந்த சட்டங்களின் மூலம் தடை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் காரணமாக ஆன்லைன் சூதாட்டங்கள் மீண்டும் தழைத்து அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிக்கத் துவங்கியுள்ளன.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கடந்த 3 நாட்களில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை என்றால் இத்தகைய உயிரிழப்புகளை தடுக்க முடியாது என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தான் ஒரே தீர்வு ஆகும். உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுவிட்டதாக அமைச்சர் ரகுபதி கூறியிருக்கும் போதிலும் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரணைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.