'ஆன்லைன்' விளையாட்டு செயலி மூலமாக பயங்கரவாதிகள் தகவல் பரிமாறுவது அம்பலம்
'ஆன்லைன்' விளையாட்டு செயலி மூலமாக பயங்கரவாதிகள் தகவல் பரிமாறுவது அம்பலம்
UPDATED : ஜூலை 27, 2025 04:37 AM
ADDED : ஜூலை 27, 2025 01:44 AM

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் பயங்கரவாத குழுக்கள், தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்ள, 'பப்ஜி' போன்ற, 'ஆன்லைன் வீடியோ கேம்'களில் உள்ள, 'வாய்ஸ் சாட்' எனப்படும், குரல்வழி தகவல் பரிமாற்ற வசதியை பயன்படுத்த துவங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'பப்ஜி' உள்ளிட்ட, 'ஆன்லைன்' விளையாட்டுகள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பிரபலம். துப்பாக்கி சண்டையை அடிப்படையாக கொண்ட இந்த விளையாட்டுகளை ஒரே நேரத்தில் உலகின் வெவ்வேறு நாடுகளில் உள்ள வர்களும் இணைந்து விளையாடலாம்.
அப்போது அவர் களுக்கு இடையே தகவல்களை பரிமாறிக்கொள்ள, 'வாய்ஸ் சாட்' எனப்படும், குரல்வழி தகவல் பரிமாற்ற வசதி இந்த விளையாட்டு செயலிகளில் உள்ளன.
கண்காணிப்பு விளையாட்டுக்காக உருவாக்கப்பட்ட இதுபோன்ற செயலிகள் தற்போது வினையாக மாறியுள்ளன. இந்த விளையாட்டு செயலிகளை பயங்கரவாத குழுக்கள் தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தி வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பின் பயங்கரவாத குழுக்களின் செயல்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக கண்காணிக்க துவங்கியுள்ளன.
முன்னதாக, 'சாட்டிலைட் போன், ரேடார்' கருவிகள், 'வாட்ஸாப்' போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக தகவல்களை பரிமாறி வந்த பயங்கரவாதிகள் அவற்றை தற்போது முற்றிலுமாக தவிர்க்க துங்கியுள்ளனர். நம் உளவுத்துறை அவற்றையும் இடைமறித்து தகவல்களை சேகரித்து வருவதே இதற்கு காரணம்.
அதற்கு மாறாக, 'ஆன்லைன் வீடியோ கேம்' செயலிகளை, பயன்படுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்ற செயலிகள், குரல்கள் அல்லது குறுஞ்செய்திகள் வாயிலாக தகவல்களை பரிமாறக்கூடிய வாய்ப்பை தருகின்றன.
இதுதவிர, அந்த தகவல்கள் இடைமறிக்க முடியாதபடி பாதுகாப்பான முறையில் சென்றடைவதால் பயங்கரவாத குழுக்களின் புதிய தகவல் தொடர்பு கருவியாக இவை மாறியுள்ளன.
தவறான நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படும் இதுபோன்ற, 'ஆன்லைன் வீடியோ கேம்' செயலி களுக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தாலும், வி.பி.என்., எனப்படும், வேறு நாட்டு இணைய முகவரியை இங்கிருந்து பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் வாயிலாக, தடை செய்யப்பட்ட விளையாட்டு செயலிகளை பயங்கரவாதிகள் இங்கு பயன் படுத்துகின்றனர்.
ஐரோப்பிய நாடான துருக்கியைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கிய செயலியை, காஷ்மீரில் பதுங்கியுள்ள பாக்., பயங்கரவாதிகள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. இது, '2ஜி' அலைவரிசையிலும், பலவீனமான, 'சிக்னல்' இருந்தாலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2019ல் ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தபோது, அங்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டது. ஆனாலும், துருக்கி நாட்டு செயலி வாயிலாக பயங்கரவாத குழுக்கள் தகவல் பரிமாறி வந்துள்ளன.
இந்த செயலி, மொபைல் போன்' எண் இல்லாமலே இயங்கும் திறன் உடையது. மேலும், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத குழுக்கள், 'விர்ச்சுவல் சிம்' எனப்படும், மெய்நிகர் சிம் கார்டுகளை வெளி நாடுகளில் இருந்து பெற்று இங்கு பயன் படுத்துகின்றனர்.
சிம் கார்டுகள் கடந்த, 2019ல் ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில், 40 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில், இதுபோன்ற 40 விர்ச் சுவல் சிம் கார்டுகள் பயன்படுத்தியது கண்டறியப் பட்டுள்ளது.
தொழில்நுட்பம் வளர வளர அவற்றை பயங்கரவாதிகள் தங்கள் தேவைக்கு ஏற்ப வளைப்பது, நம் பாதுகாப்பு படையினருக்கு மிகப் பெரிய சவாலாகவே உள்ளது.