ஒரே ஒரு டுவிட்... வேலை காலி! ஐ.டி., நிறுவன ஊழியர் சோகம்
ஒரே ஒரு டுவிட்... வேலை காலி! ஐ.டி., நிறுவன ஊழியர் சோகம்
ADDED : பிப் 12, 2024 06:45 AM
பெங்களூரு: ஒரே ஒரு டுவிட்டால், பெங்களூரு ஐ.டி., நிறுவன ஊழியரின் வேலை காலியாகி உள்ளது.
ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் என்றால், அவர்களுக்கு என்ன கவலை. கை நிறைய சம்பளம்... பார்ட்டி... என ஜாலியாக இருப்பர் என்று, எல்லாரும் நினைப்பது உண்டு. ஆனால் ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றுவது, அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை.
அங்கு பணியாற்றுவோர், தினமும் தங்களை 'அப்டேட்' செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மற்றவர்கள் 'மட்டம்' தட்டும் நிலை ஏற்பட்டு விடும்.
இந்நிலையில் ஐ.டி., ஊழியர் ஒரே ஒரு டுவிட்டால், வேலையை பறிகொடுத்து உள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர் ஜிஷ்ணு மோகன். பெங்களூரில் ஒரு ஐ.டி., நிறுவனத்தில், சாப்ட்வேர் புரோகிராமராக பணியாற்றினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, சமூக வலைத்தளமான 'எக்ஸ்' பக்கத்தில், ஒரு டுவிட் போட்டார்.
'ஐ.டி., துறையில் நிலவும், மந்தமான சூழ்நிலை என்னை பயமுறுத்துகிறது. என்னுடைய பணியில், இதுதான் மோசமான காலகட்டமாக இருக்கும்' என்று பதிவிட்டார்.
இந்த பதிவை அடுத்து, ஜிஷ்ணு மோகனை, அவர் வேலை செய்த நிறுவனம், வேலையில் இருந்து நீக்கியது.
இதையடுத்து அவர் பதிவிட்ட இன்னொரு 'டுவிட்', 'மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளேன். இப்போது வேலை தேடுவதில் சுறுசுறுப்பாக உள்ளேன். வேலை எங்காவது இருந்தால், எனக்கு தெரியப்படுத்தவும்' என்று கூறியுள்ளார். அவருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.