தீவிரவாதம் படிக்க ரூ.156 மட்டுமே: பெண்களுக்கு ஜெய்ஷ் - இ - முகமது பயிற்சி
தீவிரவாதம் படிக்க ரூ.156 மட்டுமே: பெண்களுக்கு ஜெய்ஷ் - இ - முகமது பயிற்சி
ADDED : அக் 23, 2025 02:00 AM

புதுடில்லி: பாகிஸ்தானில் இயங்கி வரும் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு, பெண்களையும் பயங்கரவாத அமைப்பில் இணைக்கும் முயற்சியை எடுத்துள்ளது. இதற்காக, 'ஆன்லைன்' வாயிலாக பயங்கரவாத பாடம் படிப்பதற்கு கட்டணமாக, 156 ரூபாயை நிர்ணயித்துள்ளது.
ஐ.நா.,வால் சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் - இ - முகமது பாகிஸ்தானில் வேரூன்றி இருக்கிறது.
இந்த அமைப்பு சமீபத்தில் பெண்களையும் இணைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தது.
இதற்காக, 'ஆன்லைன்' மூலம் பயங்கரவாத பாடம் படிக்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நவ., 8 முதல் துவங்கும் இந்த ஆன்லைன் பாட வகுப்பிற்கு கட்டணமாக இந்திய மதிப்பில், 156 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத தலைவர் மசூத் அசாரின் சகோதரிகள் சாடியா அசார் மற்றும் சமைரா அசார் ஆன்லைன் வகுப்புகளை தினசரி எடுக்க உள்ளனர்.
பெண்களுக்காக ஆரம் பிக்கப்பட்ட ஜமாத் உல் - முமினாத் பயங்கர வாத அமைப்பில் மூளை சலவை செய்து பெண்களை சேர்க்க இந்த வகுப்புகள் நடத்தப் படுகின்றன. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூரில், கடந்த மாதம் பொதுக்கூட்டம் நடந்தது.
அதில் பங்கேற்ற ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத தலைவர் மசூத் அசார், நிதி திரட்டும் பணிகளை மேற்கொள்ளும்படி அறி வுறுத்தியிருந்தார். அதனை தொடர்ந்தே ஆன்லைன் மூலம் பயங்கரவாத பாடம் எடுக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.