சபரிமலை கூட்ட நெரிசலில் தவறிய ஊட்டி சிறுமி! தந்தையுடன் சேர்க்க உதவிய அடையாள பட்டை
சபரிமலை கூட்ட நெரிசலில் தவறிய ஊட்டி சிறுமி! தந்தையுடன் சேர்க்க உதவிய அடையாள பட்டை
ADDED : டிச 06, 2024 08:17 PM

திருவனந்தபுரம்; சபரிமலைக்கு தந்தையுடன் வந்திருந்த ஊட்டி சிறுமி காணாமல் போன நிலையில், போலீசாரின் உதவியுடன் மீட்கப்பட்டார்.
சபரிமலை சீசனான தற்போது தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், குழந்தைகள் கைகளில் பட்டை ஒன்று அணிவிக்கப்படுகிறது. அவசரம் அல்லது ஆபத்து காலத்தில் யாரை தொடர்பு கொள்வது என்பது பற்றி தெரிந்து கொள்ள அதில் தொலைபேசி எண் பதிவிடப்பட்டு இருக்கும்.
இந் நிலையில் சபரிமலைக்கு ஊட்டியைச் சேர்ந்த ஒருவர் தமது குழந்தை சிவார்த்திகா என்பவருடன் வந்திருந்தார். சபரிமலை வழித்தடமான பாப்பந்ததில் கூட்ட நெரிசல் காரணமாக, அவர் தந்தையிடம் இருந்து தவறிவிட்டார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று கொண்டிருந்த தருணத்தில் சிறுமி சிவார்த்திகா அழுது கொண்டிருப்பதை அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த அக்சய் என்பவர் கவனித்தார். தந்தையுடன் வந்திருந்த அவர், வழிதவறியதை கண்டு, சிறுமியின் கையில் இருந்த அடையாள பட்டையில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டனர்.
அவரிடம் விபரத்தை தெரிவித்த அக்சய், சிறுமி தம்மிடம் இருக்கும் விபரத்தை தெரிவித்தார். சிறிதுநேரத்தில் தந்தையும் அங்கு வந்துவிட அவரிடம் சிறுமி சிவார்த்திகாவை அக்சய் ஒப்படைத்தார். நன்றி கூறிய தந்தையும், மகள் சிவார்த்திகாவை தம்முடன் அழைத்துச் சென்றார்.
இதுவரை 10 வயதுக்குட்பட்ட 5000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காவல்துறையினர் மணிக்கட்டில் பட்டை கட்டியுள்ளனர். தினமும் குழந்தைகள் உட்பட 500க்கும் மேற்பட்டோருக்கு அடையாள பட்டைகள் வழங்கப்படுகிறது என்றும், பிற மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.