ADDED : அக் 12, 2025 11:58 AM

புதுடில்லி: 'அமிர்தசரஸ் பொற்கோவிலை மீட்பதற்காக, ராணுவத்தை அனுப்பிய ஆபரேஷன் புளூஸ்டார் நடவடிக்கை, ஒரு தவறான வழிமுறை,' என்று, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.
இமாச்சல் மாநிலம் கசவுலியில், மறைந்த எழுத்தாளர் குஷ்வந்த் பெயரில் இலக்கியத் திருவிழா நடந்து வருகிறது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது: பயங்கரவாதிகளிடம் இருந்து பொற்கோவிலை மீட்கும் முடிவானது, ராணுவம், போலீஸ், உளவுத்துறை, சிவில் சர்வீஸ் என அனைத்து தரப்பினரின் கூட்டு முடிவு. அந்த முடிவுக்காக இந்திராவை மட்டும் குறை சொல்ல முடியாது. ஆபரேஷன் புளூஸ்டார் நடவடிக்கையானது, பொற்கோவிலை மீட்பதற்காக கையாளப்பட்ட தவறான வழிமுறை. அந்த தவறுக்காக, இந்திரா தன் உயிரையே இழந்தார்.
சில ஆண்டுகள் கழித்து, ராணுவத்தை பயன்படுத்தாமலேயே, பொற்கோவிலை சரியான வழியில் மீட்டோம். காலிஸ்தான் பிரிவினைவாத கோரிக்கை இப்போது மங்கிப்போய் விட்டது. பொருளாதார பிரச்னைகள் முக்கியத்துவம் பெற்று விட்டன.
பஞ்சாப்புக்கு சென்று வந்த வகையில், பிரிவினைவாதம் மடிந்து விட்டது என்று நான் நம்புகிறேன். உண்மையான பிரச்னை என்பது பொருளாதார சூழல் தான்.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
அது என்ன ஆபரேஷன் புளூஸ்டார்
அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் பதுங்கியிருந்த பிந்திரன்வாலே தலைமையிலான பயங்கரவாதிகளை வெளியேற்றுவதற்காக, 'ஆபரேஷன் புளூஸ்டார்' நடவடிக்கையை 1984ம் ஆண்டு ஜூன் 1 முதல் ஜூன் 8 வரை ராணுவம் மேற்கொண்டது.
பொற்கோவில் வளாகத்தில் பலர் கொல்லப்பட்ட நிலையில், சீக்கியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அப்போது பிரதமராக இருந்த இந்திரா, 1984ம் ஆண்டு அக்.,31ல் சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார்.