ஓ.பி.சி., பழங்குடியினர் எத்தனை பேர்?: கணக்கு கேட்கிறார் ராகுல்
ஓ.பி.சி., பழங்குடியினர் எத்தனை பேர்?: கணக்கு கேட்கிறார் ராகுல்
UPDATED : பிப் 05, 2024 05:18 PM
ADDED : பிப் 05, 2024 05:16 PM
ராஞ்சி: ‛‛நாட்டில் ஓ.பி.சி., பழங்குடியினர் மற்றும் தலித் வகுப்பினர் எத்தனை பேர் உள்ளனர்'' என காங்கிரஸ் எம்.பி ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் பேசியதாவது: பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., சதியை முறியடித்து, ஏழைகளின் அரசைக் காப்பாற்றியதற்காக ஹேமந்த் சோரன் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.எல். ஏ.,க்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். நரேந்திர மோடியும் அவரது அரசும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைத்து வருகிறது.
ஒட்டுமொத்த பொதுத்துறை நிறுவனங்களிலும் அதானியின் பெயர் பலகையை வைக்க பா.ஜ., அரசு நினைக்கிறது. ஆனால், இதையெல்லாம் காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். நாட்டில் ஓ.பி.சி., பழங்குடியினர் மற்றும் தலித் வகுப்பினர் எத்தனை பேர் உள்ளனர். இந்தக் கேள்விக்கு யாராலும் சரியான பதிலைச் சொல்ல முடியாது.
தெலுங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுக்கும் பணி துவங்கிவிட்டது. தெலுங்கானாவில் எத்தனை ஓ.பி.சி, பழங்குடியினர், தலித் மற்றும் சிறுபான்மையினர் உள்ளனர் என்பது இன்னும் சில மாதங்களில் தெரியவரும். தனியார் மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். அதாவது இவர்கள் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ராகுல் பேசினார்.
சைக்கிளை தள்ளிய ராகுல்


