ஹாசனாம்பா கோவில் திறப்பு: 9 நாள் பக்தர்களுக்கு அனுமதி
ஹாசனாம்பா கோவில் திறப்பு: 9 நாள் பக்தர்களுக்கு அனுமதி
ADDED : அக் 25, 2024 07:50 AM

ஹாசன்: தீபாவளியை ஒட்டி, ஹாசன் ஹாசனாம்பா கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. இன்று முதல் 9 நாட்கள், பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். நேரடியாக அம்மனை தரிசிக்க 1,000 ரூபாயும், சிறப்பு தரிசனத்திற்கு 300 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஹாசன் டவுனில் ஹாசனாம்பா கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் நடை, ஆண்டுதோறும் தீபாவளியை ஒட்டி 10 நாட்கள் திறப்பது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் கோவில் கதவை மூடும் போது, விளக்கு ஏற்றுவர். ஓராண்டு கழித்து கதவை திறக்கும் போது, விளக்கு எரிந்து கொண்டு இருக்கும், அதிசயம் இந்த கோவிலில் நடக்கிறது.
இந்நிலையில், வரும் 31ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுவதை ஒட்டி, கோவிலின் நடை நேற்று திறக்கப்பட்டது. கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா, ஹாசன் காங்கிரஸ் எம்.பி., ஷ்ரேயஸ் படேல், துமகூரு சித்தகங்கா மடத்தின் மடாதிபதி சித்தலிங்க சுவாமிகள், ஹாசன் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஸ்வரூப் பிரகாஷ், கலெக்டர் சத்யபாமா, எஸ்.பி., முகமது சுஜிதா உள்ளிட்டோர், கோவில் நடை திறப்பில் கலந்து கொண்டு, அம்மனை தரிசித்தனர். அடுத்த மாதம் 3ம் தேதி வரை 11 நாட்கள் கோவில் திறந்து இருக்கும்.
ஆண்டுதோறும் முதல் மற்றும் கடைசி நாளில் பக்தர்களை தரிசிக்க அனுமதிப்பது இல்லை. ஆனால், நேற்று கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இன்று வெள்ளிக்கிழமை என்பதால், அதிக கூட்டம் வரும் வாய்ப்பு உள்ளது.
நேரடி அம்மன் தரிசனத்திற்கு 1,000 ரூபாயும், சிறப்பு தரிசனத்திற்கு 300 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பொது தரிசனமும் உள்ளது.