ADDED : பிப் 13, 2024 07:06 AM

பெங்களூரு: கர்நாடக எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் பொழுது போக்குவதற்கு, அரசு தரப்பில் பெங்களூரில் அமைக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் கிளப் நேற்று திறக்கப்பட்டது.
பெங்களூரு பாலபுரூஹி அரசினர் விருந்தினர் மாளிகை, எம்.எல்.ஏ.,க்கள் கிளப் ஆக மாற்றப்பட்டது. இதை, முதல்வர் சித்தராமையா நேற்று துவக்கி வைத்தார்.
இதில், அவர் பேசியதாவது:
ஒரு முறை நானும், எம்.எல்.ஏ., பி.ஆர்.பாட்டீல், முன்னாள் எம்.பி., உக்ரப்பா, பிரமுகர் கோதண்டராமையா ஆகியோர் பெங்களூரின் ஒரு கிளப்பிற்கு சென்றோம். நான் வேட்டி அணிந்திருந்தேன்.
வேட்டி அணிந்திருப்பவர்களுக்கு, கிளப்பிற்குள் அனுமதி இல்லை என்று கூறினர். சண்டை போட்டு உள்ளே சென்றோம். மகாத்மா காந்தி, குறைவான ஆடையை தான் அணிந்திருந்தார்.
அவருக்கு வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்க, வாய்ப்பு தரப்பட்டது. ஆனால், எனக்கு கிளப்பிற்குள் செல்ல அனுமதி தரப்படவில்லை. எனவே தான், நமக்காக ஒரு கிளப் இருக்க வேண்டும் என்று கருதி இது கட்டப்பட்டுள்ளது.
நம்முடைய கிளப்பிற்கு, வேட்டி அணிந்து கொண்டு எம்.எல்.ஏ.,க்கள் வரலாம். குறிப்பிட்ட ஆடை தான் உடுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு சரியில்லை. அவை எல்லாம் ஆங்கிலேயர் கலாசாரம்.
எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள்., முன்னாள் எம்.எல்.சி.,க்கள் உறுப்பினராகலாம். இரவு நேரத்தில் வெளியில் சாப்பிடுவதை தவிர்த்து, இங்கேயே உணவு சாப்பிடுங்கள்.
கிளப்பும் நல்லபடியாக செயல்படும். மாலை நேரத்தில் பொழுது போக்க இத்தகைய கிளப்கள் தேவை. நானும் சில நேரம் வருகிறேன். விதான் சவுதா அருகில் இருப்பதால், அடிக்கடி வந்து ஆலோசனை செய்ய சிறந்த இடம்.
புத்தகம் படிக்கலாம், டீ குடிக்கலாம், உள்விளையாட்டு வசதி இருக்கும். முதல்வராக இருப்பவர் தான், இந்த கிளப்பிற்கு கவுரவ தலைவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
சபாநாயகர் காதர், சட்ட மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
***
...பாக்ஸ்...
படம்: 13_CM Insect
உணவில் புழு: சபாநாயகர் காட்டம்
முதல்வர், சபாநாயகர் உட்பட நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. பத்திரிகையாளர்களுக்கும் அதே உணவு வழங்கப்பட்டது. ஒரு பத்திரிகையாளர் சாப்பிடும்போது, சாம்பாரில் நீண்ட புழு ஒன்று கிடந்தது. உடனே உணவு பரிமாறியவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் சரியாக பதில் சொல்லவில்லை. உணவு சாப்பிட்டு கொண்டிருந்த சபாநாயகர் காதருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உணவை கொண்டு ஹோட்டல் உரிமையாளரை தொடர்பு கொண்டு காட்டமாக பேசினார். உணவு தொகை தர கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
...பாக்ஸ்...
சரக்கு அடிக்கலாம்
முதல்வர் சித்தராமையா பேசி கொண்டிருந்த போது, சட்ட மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி இனி கொஞ்சம் சரக்கு அடிக்கலாம். தொந்தரவு கிடையாது, என்று சிரித்தபடி அவரை கிண்டலடித்தார்.