'ஆப்பரேஷன் தாமரை' பொய்! சிவகுமார் மீது குற்றச்சாட்டு
'ஆப்பரேஷன் தாமரை' பொய்! சிவகுமார் மீது குற்றச்சாட்டு
ADDED : மார் 12, 2024 03:22 AM

தாவணகெரே: கர்நாடக காங்., அரசை கவிழ்க்கும் நோக்கில், தலைவர்களை பா.ஜ., தொடர்பு கொண்டு பணத்தாசை காண்பிப்பதாக, துணை முதல்வர் சிவகுமார் குற்றஞ்சாட்டினார். இதை காங்., மூத்த தலைவர் சிவசங்கரப்பா மறுத்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் ஆளுங்கட்சி காங்கிரஸ், தங்கள் சாதனைகளை கூறி பிரசாரம் செய்வதை விட, எதிர்க்கட்சிகளான பா.ஜ., - ம.ஜ.த.,வை விமர்சித்தும், குற்றம்சாட்டியும் ஓட்டு சேகரிக்கிறது.
இந்நிலையில் துணை முதல்வர் சிவகுமார், ஊடகத்தினர் சந்திப்பில், 'எங்கள் அரசை கவிழ்க்க, பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் முயற்சிக்கின்றனர். காங்., - எம்.எல்.ஏ.,க்களுக்கு 55 கோடி ரூபாய் தருவதாக, ஆசை காண்பிக்கின்றனர். காங்., - எம்.எல்.ஏ.,க்களை, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, குமாரசாமி தொடர்பு கொண்டு பேசினர். இதுகுறித்து சில எம்.எல்.ஏ.,க்கள் என்னிடம் தகவல் கூறினர்' என, குற்றஞ்சாட்டினார்.
சிவகுமாரின் குற்றச்சாட்டை, காங்., மூத்த எம்.எல்.ஏ., சிவசங்கரப்பா மறுத்துள்ளார். இதுகுறித்து, தாவணகெரேவில் நேற்று அவர் கூறியதாவது:
காங்கிரஸ் அரசை கவிழ்க்க, 'ஆப்பரேஷன் தாமரை' நடத்துவதாக கூறுவது பொய். என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. அரசை கவிழ்க்க உதவியும் கேட்கவில்லை. சிவகுமார் குற்றஞ்சாட்டினால், அவரையே கேளுங்கள். அவர் கூறுவது பொய். எங்களுக்கு பணம் வரவில்லை.
ஒரு வேளை எனக்கு பணம் கொடுத்திருந்தால், எண்ணி பார்த்து வைத்துக்கொண்டிருப்பேன். பா.ஜ., - ம.ஜ.த., மற்றும் காங்கிரசார் என, யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

