ADDED : செப் 19, 2024 03:14 PM

புதுடில்லி: டில்லியில், வரும் 21ம் தேதி புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள அதிஷி அமைச்சரவையில் சுல்தான்பூர் மஜ்ரா தொகுதி எம்.எல்.ஏ.,வான, முகேஷ் அலாவத்திற்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டில்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவாலின் ராஜினாமாவை அடுத்து, அதிஷி, முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, வரும் செப்.21, அன்று டில்லியின் முதல்வராக அதிஷி மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள்.
அவரது அமைச்சரவையில், சுல்தான்பூர் மஜ்ரா தொகுதி எம்.எல்.ஏ.வான, முகேஷ் அலாவத்திற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என தெரிகிறது. முகேஷ் அலாவத் தலித் சமூகத்தை சேர்ந்தவர்.
இவருடன் மற்ற 4 அமைச்சர்களான கைலாஷ் கெலாட், சவுரப் பரத்வாஜ், கோபால் ராய் மற்றும் இம்ரான் ஹூசைன் ஆகியோர் அமைச்சர்களாக மீண்டும் பொறுப்பேற்பர் என டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலாவத், முதல்முதலில் 2020ல் சுல்தான்பூர் மஜ்ரா தொகுதியில் போட்டியிட ஆம்ஆத்மி மேலிடம் வாய்ப்பு அளித்தது. அவர் அந்த தொகுதியில் 48,042 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் முன்னாள் அமைச்சர் சந்தீப் குமாரை தோற்கடித்தார். சந்தீப் குமார் முன்னாள் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அலாவத், டில்லி வட மேற்கு மண்டலத்தில் தலித் சமூகத்தின் பலம் வாய்ந்தவராக இருந்துவருகிறார்.
இந்நிலையில், 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், வடமேற்கு டில்லியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ்க்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனால் அவர் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

