சீஷெல்ஸ் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் வெற்றி
சீஷெல்ஸ் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் வெற்றி
ADDED : அக் 13, 2025 12:01 AM

விக்டோரியா: சீஷெல்ஸ் நாட்டில் நடந்த அதிபருக்கான தேர்தலின் இரண்டாம் சுற்று ஓட்டெடுப்பில், எதிர்க்கட்சி தலைவரான பேட்ரிக் ஹெர்மினி, 62, வெற்றி பெற்றுள்ளார்.
கிழக்கு ஆப்ரிக்காவின் கிழக்கே, இந்திய பெருங்கடலில் உள்ள தீவு கூட்டமான சீஷெல்ஸ் நாட்டில் அதிபருக்கான தேர்தல் இரண்டு வாரங்களுக்கு முன் நடந்தது. இதில் வெற்றி பெற வேட்பாளர்கள் 50 சதவீத ஓட்டுகளை பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், எதிர்க்கட்சி தலைவர் பேட்ரிக் ஹெர்மினி 48.80 சதவீதமும், தற்போதைய அதிபர் வேவல் ராம்கலவன் 46.40 சதவீதமும் ஓட்டுகளையும் பெற்றிருந்தனர்.
இதையடுத்து நடந்த இரண்டாவது சுற்று ஓட்டெடுப்பில், எதிர்க்கட்சி தலைவரும், ஐக்கிய சீஷெல்ஸ் கட்சியைச் சேர்ந்தவருமான பேட்ரிக் ஹெர்மினி 52.70 சதவீத ஓட்டுகளை பெற்று அதிபராக வெற்றி பெற்றார். வேவல் ராம்கலவன் 47.30 சதவீதம் ஓட்டுகளை பெற்றார்.
கடந்த 1977 முதல் 2020ம் ஆண்டு வரை ஹெர்மனியின் கட்சியான ஐக்கிய சீஷெல்ஸ் கட்சி ஆட்சியில் இருந்தது.
கடந்த 2007 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் அந்நாட்டு பார்லிமென்டின் சபாநாயகராக பணியாற்றியவர் பேட்ரிக் ஹெர்மினி. 2020ல் நடந்த தேர்தலில், ஐக்கிய சீஷெல்ஸ் கட்சி அதிகாரத்தை இழந்ததையடுத்து, வேவல் ராம்கலவன் தலைமையிலான எல்.டி.எஸ்., எனும் 'லின்யான் டெமாக்ரடிக் செசெல்வா' கட்சி ஆட்சிக்கு வந்தது.
சீஷெல்சின் அதிபராக பேட்ரிக் ஹெர்மினி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு நம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ஹெர்மினியின் பதவி காலத்தில் இந்தியாவுக்கும், சீஷெல்சுக்கும் இடையேயான உறவுகள் மேலும் வலுப்பெறும் என நம்புவதாக, வாழ்த்து செய்தியில் மோடி குறிப்பிட்டுள்ளார்.