தேர்தல் முடிவை ஏற்க மறுப்பு: பதவியேற்பை புறக்கணித்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள்
தேர்தல் முடிவை ஏற்க மறுப்பு: பதவியேற்பை புறக்கணித்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள்
UPDATED : டிச 07, 2024 10:49 PM
ADDED : டிச 07, 2024 05:33 PM

மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர், எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. முதல்வராக பா.ஜ.,வின் பட்னவிஸ் பதவியேற்றார். துணை முதல்வர்களாக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் ஆகியோர் பதவியேற்றனர். சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்பகரை கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமித்தார். எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்புக்காக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தொடர் 3 நாட்கள் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
இன்று துவங்கிய கூட்டத்தொடரில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்று வரும் நிலையில், எதிர்க்கட்சி கூட்டணியான மஹா விகாஸ் அகாடி கூட்டணியை சேர்ந்தவர்கள் இந்நிகழ்ச்சியை புறக்கணித்தனர். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்து ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். பிறகு, சட்டசபை முன்பு உள்ள சத்ரபதி சிவாஜி சிலை முன்பு கூடி போராட்டம் நடத்தினர்.
அப்போது, சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே கூறியதாவது: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. இதனால், பதவியேற்பு நிகழ்ச்சியை நாங்கள் புறக்கணித்தோம். தேர்தல் முடிவு என்பது மக்கள் அளித்த முடிவு அல்ல. மின்னணு இயந்திரம் மற்றும் தேர்தல் ஆணையம் மூலம் பெறப்பட்டது எனக்கூறினார். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினரும் இதே கருத்தை எதிரொலித்தனர்.
ஆனால், எதிர்க்கட்சி கூட்டணியில் இடம்பெற்று இருந்த சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இரண்டு பேர் பதவியேற்றுக் கொண்டனர்.
சமாஜ்வாதி வெளியேறியது
மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் இணைந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி எம்.எல்.ஏ., அபு ஆஸ்மி கூறுகையில், '' டிச., 6 அன்று பாபர் மசூதி இடிப்புக்கு ஆதரவாக உத்தவ் தாக்கரே கட்சி சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டு உள்ளது. இதனை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. பா.ஜ.,வுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம். நாம் ஏன் அவர்கள் கூட்டணியில் இருக்க வேண்டும். எனவே, மஹா விகாஸ்அகாடி கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.