ராஜ்யசபா அவைத்தலைவருக்கு எதிராக ' இண்டியா' கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானம்
ராஜ்யசபா அவைத்தலைவருக்கு எதிராக ' இண்டியா' கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானம்
UPDATED : டிச 10, 2024 03:47 PM
ADDED : டிச 10, 2024 03:41 PM

புதுடில்லி: ராஜ்யசபா அவைத்தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ள ' இண்டியா' கூட்டணி கட்சிகள், அதனை அவைச் செயலாளரிடம் தாக்கல் செய்துள்ளன.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. முதல் நாளில் இருந்தே, தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராக, அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மோசடி வழக்கு தொடர்பான பிரச்னையை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இது தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால் இரு சபைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வந்தன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா தொடர்புடைய அமைப்புக்கு இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் வழங்கும் நிதியுதவி குறித்து விவாதிக்க வேண்டும் என, ஆளும் தரப்பு கூறி வருகிறது. இன்றும் அமளி காரணமாக பார்லிமென்ட் ஒத்திவைக்கப்பட்டது. பார்லிமென்ட் வளாகத்தில் எதிர்க்கட்சிகள் எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தின.
இந்நிலையில், ராஜ்யசபா அவைத்தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை, ராஜ்யசபா செயலாளரிடம் ' இண்டியா ' கூட்டணி கட்சிகள் தாக்கல் செய்துள்ளன.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'இண்டியா' கூட்டணி கட்சிகள் வேறு வழியில்லாமல் இந்த முடிவை எடுத்துள்ளன. ராஜ்யசபா அவைத் தலைவர் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்கிறார். ' இண்டியா' கூட்டணிக்கு இது வேதனையான முடிவு. ஆனால், பார்லிமென்ட் ஜனநாயகத்தின் நலனுக்காக இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டி இருந்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவைச் செயலாளரிடம் தாக்கல் செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக காங்கிரசின் சக்திசிங் கோலி கூறியதாவது: எதிர்க்கட்சியினரை நோக்கி ஆளுங்கட்சியினர் கோஷம் போடுவதால், பார்லிமென்ட் இயங்கவில்லை. பார்லிமென்டை செயல்பட வைப்பது ஆளுங்கட்சியினரின் கடமை. எங்களின் போராட்டம் என்பது அரசின் கொள்கைக்கு எதிராது. ஆனால், அவைத்தலைவர் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். எங்களை அவரை அனுமதிக்கவில்லை. இது ஏமாற்றம் அளிக்கிறது. இன்று நட்டா பேசும்போது, அவரது மைக் அணைக்கப்படவில்லை. யாரும் அவரை தடுக்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சியை சேர்ந்த பிரமோத் திவாரி பேசத் துவங்கிய ஓரிரு வினாடிகளில் அவரது மைக் அணைக்கப்பட்டது. அவைத்தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இண்டியா கூட்டணி தலைவர்கள் கையெழுத்து போட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
திரிணமுல் காங்கிரஸ் தலைவர் சகாரிகா கோஷ் கூறியதாவது: நமது அரசியலமைப்பு உரிமைகளைப் பின்பற்றி, பார்லிமென்ட் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொடுத்துள்ளோம். எதிர்க்கட்சிகளுக்கு பேச அனுமதி வழங்கப்படுவது இல்லை என்றார்.
அக்கட்சியின் மற்றொரு தலைவர் சுஷ்மிதா தேவ் கூறுகையில், அரசியலமைப்பு சட்டத்தின்படி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு. முக்கிய பிரச்னைகள் குறித்து பேச அனுமதி வழங்கப்படுவது இல்லை என்றார்.