டில்லியில் பேரணி சென்ற எதிர்க்கட்சி எம்பிக்கள் தடுத்து நிறுத்தம்; ராகுல் உள்ளிட்டோர் கைது
டில்லியில் பேரணி சென்ற எதிர்க்கட்சி எம்பிக்கள் தடுத்து நிறுத்தம்; ராகுல் உள்ளிட்டோர் கைது
UPDATED : ஆக 11, 2025 01:01 PM
ADDED : ஆக 11, 2025 12:29 PM

புதுடில்லி: வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாகக் கூறி, டில்லியில் ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தியதால், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தல் உள்பட அதன்பின் நடந்த மாநில சட்டசபை தேர்தல்களில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டினார். போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள் என அடுக்கடுக்கான புகார்களை கூறி, ஆவணங்களை வெளியிட்டார். அவரது இந்தக் குற்றச்சாட்டு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் ராகுலுக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகளும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததைக் கண்டித்து தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணி நடத்த இண்டி கூட்டணி கட்சியினர் போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால், சட்டம் ஒழுங்கு காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டது.
போலீசாரின் தடையை மீறி பார்லிமென்ட் வளாகத்தில் இருந்து நிர்வாச்சன் சதானில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியை தொடங்கினர். திமுக உள்பட சுமார் 25 கட்சிகளைச் சேர்ந்த 300 எம்பிக்கள் கலந்து கொண்டனர்.
ஆனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆவேசமடைந்த பிரியங்கா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எம்பிக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பீஹார் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் செய்வதற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சமாஜ்வாதி கட்சி எம்பி அகிலேஷ் யாதவ், தடுப்புகளின் மீது ஏறி குதித்து சென்றார். தமிழக எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் தடுப்புகள் மீது ஏறி அமர்ந்து முழக்கமிட்டனர். இதனால் தலைநகர் டில்லியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்த நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

