லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி; பிற்பகல் வரை அவை ஒத்திவைப்பு
லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி; பிற்பகல் வரை அவை ஒத்திவைப்பு
ADDED : ஆக 04, 2025 12:03 PM

புதுடில்லி: பீஹார் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மழைக்கால கூட்டத் தொடரின் 11வது நாள் கூட்டம் இன்று கூடியது. பீஹார் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை இரு அவைகளிலும் கேள்வி நேரம் உள்பட எந்த அலுவல் பணிகளும் நடைபெறவில்லை. பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், இரு அவைகளிலும் சபாநாயகர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல இரு அவைகளும் கூடின. விளையாட்டு மசோதாவை நிறைவேற்றலாம் என்று மத்திய அரசு எதிர்பார்த்திருந்தது. ஆனால், லோக் சபாவில் எதிர்க்கட்சியினர் இன்றும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, அமைதி காக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கோரிக்கை விடுத்தார். ஆனால், இதனை கேட்க மறுத்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால், அவை நடவடிக்கையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதனிடையே எம்.பி. சிபு சோரனின் மறைவு குறித்து இரங்கல் செய்தி குறிப்பு ராஜ்யசபாவில் வாசிக்கப்பட்டது. அதன்பிறகு, நாளை காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.