எதிர்க்கட்சிகள் அமளி; 3வது நாளாக இரு அவைகளும் ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகள் அமளி; 3வது நாளாக இரு அவைகளும் ஒத்திவைப்பு!
ADDED : நவ 28, 2024 12:53 PM

புதுடில்லி: எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இன்று (நவ.,28) 3வது நாளாக பார்லிமென்ட் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ம் தேதி துவங்கியது. பார்லிமென்டிற்கு வந்த பிரதமர் மோடி, செய்தியாளர்கள் சந்திப்பில், 'மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், பார்லிமென்டை முடக்க முயற்சிக்கின்றனர். எதிர்க்கட்சியினர் இனியாவது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும்' என வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதனை துளி அளவு கூட எதிர்க்கட்சிகள் மதிக்கவில்லை.
இந்நிலையில், இன்று (நவ.,28) 3வது பார்லிமென்ட் இரு அவைகளும் கூடின. எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், 'அதானி... அதானி' என, முழக்கமிட்டனர். அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடத்த அவைத்தலைவர் அனுமதி மறுத்ததால் அமளியில் ஈடுபட்டனர்.
ராஜ்யசபா, காலை கூடியதுமே பிரச்னை கிளம்பியது. அதானி லஞ்ச விவகாரம், மணிப்பூர், உ.பி., மதக்கலவரம், வயநாடு இயற்கை பேரிடர் என, பல்வேறு விவகாரங்கள் குறித்து எம்.பி.,க்கள் கோஷம் எழுப்பினர். இதனால் பார்லிமென்ட் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து 3 நாளாக எந்த மசோதாவும் தாக்கல் செய்ய அலுவல் நேரம் முடங்கி உள்ளது.