வங்கதேச விவகாரத்தில் அரசுடன் எதிர்க்கட்சிகள்... கைகோர்ப்பு! ஷேக் ஹசீனாவுக்கு உதவ ஒருமித்த ஆதரவு
வங்கதேச விவகாரத்தில் அரசுடன் எதிர்க்கட்சிகள்... கைகோர்ப்பு! ஷேக் ஹசீனாவுக்கு உதவ ஒருமித்த ஆதரவு
ADDED : ஆக 07, 2024 02:16 AM

வங்கதேசத்திலிருந்து தப்பி வந்து தஞ்சம் அடைந்துள்ள, அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக, அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசுக்கு முழு ஒத்துழைப்பை அளிப்பதாக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் வாக்குறுதி அளித்துள்ளன.
வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள திடீர் அரசியல் குழப்பம் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மத்திய அரசு நேற்று அழைப்பு விடுத்தது.
பாதுகாப்பு
பார்லிமென்ட்டில் உள்ள அரங்கில் நடந்து இந்த கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா, தி.மு.க., - எம்.பி., பாலு, தேசியவாத காங்., - எம்.பி., சுப்ரியா சுலே, திரிணமுல் காங்., - எம்.பி., சுதீப் பந்தோபாத்யா, ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி., மிஸா பாரதி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.
வங்கதேசத்தில் நிலவும் சூழல் குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் விரிவாக விளக்கினார்.
அங்கு வசிக்கும் 10,000 இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி அந்நாட்டு ராணுவ தளபதியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தியர்களை பாதுகாப்பதும், நாடு திரும்ப விருப்பம் உள்ளவர்களை பத்திரமாக அழைத்து வருவதற்குமான ஏற்பாடுகளை வெளியுறவுத்துறை செய்து வருவதாக அவர் கூறினார்.
தவிர, அந்நாட்டின் அரசியல் நிலைமை இந்த அளவு உச்சகட்டத்தை எட்டியதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்தும் எம்.பி.,க்களுக்கு விளக்கப்பட்டது.
இது தவிர, பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டவுடன், ஷேக் ஹசீனா அங்கிருந்து எவ்வாறு தப்பி இந்தியா வந்தார், அவருடைய வீட்டை கலவரக்காரர்கள் எவ்வாறு முற்றுகையிட்டனர் என்பது உட்பட அனைத்து விபரங்களும் விவாதிக்கப்பட்டன.
ஷேக் ஹசீனா நம் நாட்டில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளார் என்பதை கூறிய மத்திய அரசு, லண்டனுக்கு விரைவில் அரசியல் அடைக்கலம் கேட்டு செல்ல அவர் விருப்பமாக உள்ளதாகவும் தெரிவித்தது.
அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளின் அதிர்ச்சியில் இருந்து ஹசீனா இன்னும் மீளவில்லை என்றும், அவர் இயல்பு நிலைக்கு திரும்பியதும் அவரது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அவரிடம் கேட்டறிய கால அவகாசம் வழங்கப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஹசீனாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
வங்கதேசத்தில் 20,000க்கும் அதிகமான இந்தியர்கள் இருந்தனர். அவர்களில், 8,000 பேர் நாடு திரும்பிவிட்டனர். அங்குள்ள இந்தியர்கள், இந்திய துணைத் துாதரகத்துடன் தொடர்பில் உள்ளனர் என, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
வங்கதேசத்தின் சில பகுதிகளில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் தாக்கப்படுவதையும் மத்திய அரசு தொடர்ந்து கவனித்து வருவதாக தெரிவித்து உள்ளது.
ஆம் ஆத்மிக்கு 'நோ'
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஆம் ஆத்மிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என, அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் நேற்று குற்றஞ்சாட்டினார்.
''தேசிய பாதுகாப்பு தொடர்பான எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க தேசிய கட்சியான ஆம் ஆத்மிக்கு அழைப்பு இல்லை. எங்களுக்கு 13 எம்.பி.,க்கள் உள்ளனர்.
''அப்படியிருந்தும் எங்களை அழைக்காதது அரசின் குறுகிய மனப்பான்மையை காட்டுகிறது,'' என்றார்.
- நமது டில்லி நிருபர் -