டிஜிட்டல் தகவல் பாதுகாப்பு சட்டப்பிரிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
டிஜிட்டல் தகவல் பாதுகாப்பு சட்டப்பிரிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
ADDED : ஏப் 11, 2025 12:25 AM

புதுடில்லி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரிவை நீக்கும் வகையிலான, டிஜிட்டல் தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டப்பிரிவுக்கு, எதிர்க்கட்சிகளின், 'இண்டி' கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டத்தின், 44 - 3 பிரிவானது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின், 8 - 1 - ஜே பிரிவு வழங்கும் விதிவிலக்குகளை ரத்து செய்வதாக உள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், எதிர்க்கட்சிகளின், இண்டி கூட்டணியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, காங்கிரசின் லோக்சபா துணைத் தலைவர் கவுரவ் கோகோய் உட்பட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நிருபர்களை டில்லியில் நேற்று சந்தித்தனர். அப்போது கவுரவ் கோகோய் கூறியுள்ளதாவது:
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 8 - 1 - ஜே பிரிவானது, தனிநபர் தகவல்களை வெளியிடுவது அத்துமீறல் என்று கூறியுள்ளது. அதே நேரத்தில், பொதுநோக்கம் இருக்கும் பட்சத்தில், அந்த தனிநபர் தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும் என்று கூறுகிறது.
ஆனால், புதிதாக அறிமுகமாகியுள்ள டிஜிட்டல் தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்தின், 44 - 3 பிரிவானது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 8 - 1 - ஜே பிரிவை ரத்து செய்யும் வகையில் உள்ளது.
அதாவது பொதுநோக்கமாக இருந்தாலும், சில குறிப்பிட்ட தகவல்களை வெளியிட முடியாது என்று கூறப்படுகிறது.
இது ஆபத்தாக முடிந்து விடும். சில குறிப்பிட்ட தனிநபர் தொடர்பான விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற முடியாது.
அதனால், இந்த புதிய சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக, இண்டி கூட்டணியில் உள்ள, 120 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு கூட்டாக கோரிக்கை மனுவை தயாரித்துள்ளோம்.
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் வழங்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

