சண்டிகர் நிர்வாக விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கதறல்: முடிவு எடுக்கவில்லை என்கிறது மத்திய அரசு
சண்டிகர் நிர்வாக விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கதறல்: முடிவு எடுக்கவில்லை என்கிறது மத்திய அரசு
ADDED : நவ 23, 2025 11:23 PM

புதுடில்லி: சண்டிகரை ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான 131வது அரசியல் சாசன திருத்த மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், பஞ்சாப் மாநில அரசியல் கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால், சண்டிகர் விவகாரத்தில் இதுவரை எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்கவில்லை என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இருந்து, 1966ல் ஹரியானா தனியாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து இரு மாநிலங்களுக்கும் சண்டிகர் பொதுவான தலைநகராக உருவாக்கப்பட்டது.
எனினும், சண்டிகர் தங்களுக்கே சொந்தம் என பஞ்சாப் கூறி வருகிறது. இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையை தீர்க்க, சண்டிகர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.
திருத்த மசோதா இந்நிலையில், யூனியன் பிரதேசமான சண்டிகரை அரசியல் சாசன சட்டம் 240வது பிரிவின் கீழ் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதற்காக, 131வது அரசியல் சாசன சட்ட திருத்த மசோதாவை வரும் குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள், லட்சதீவு, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டையூ மற்றும் தாமன், புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்கள் போல சட்டசபை கலைக்கப்பட்டால், ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் சண்டிகர் சென்றுவிடும்.
சண்டிகரின் நிர்வாக அதிகாரியாக பஞ்சாப் கவர்னரே தற்போது செயல்பட்டு வரும் சூழலில், இந்த திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், கடந்த காலங்களில் இருந்தது போல, சண்டிகருக்கு என தனியாக நிர்வாக அதிகாரி நியமிக்கப்படுவார்.
கடும் ஆட்சேபம் எனவே, பஞ்சாபில் அமைந்துள்ள முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசும், பல்வேறு எதிர்க்கட்சிகளும், மத்திய அரசின் இந்த யோசனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஒரு காலத்தில் தே.ஜ., கூட்டணியில் இருந்த அகாலி தளமும் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, சண்டிகர் விவகாரத்தில் எந்தவொரு இறுதி முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
சண்டிகர் யூனியன் பிரதேசத்திற்கான சட்டம் இயற்றுதலை எளிமைப்படுத்த கருத்துரு மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளது. அதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கிறது.
அந்த கருத்துரு குறித்து இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக அனைத்து கட்சிகளிடமும் கலந்து ஆலோசித்த பிறகே முடிவு எடுக்கப்படும். எனவே, அரசியல் கட்சிகள் கவலை அடைய வேண்டாம்.
மேலும், வரும் குளிர்கால கூட்டத்தொடரிலும் இதற்கான எந்தவொரு மசோதாவையும் அறிமுகப்படுத்தும் எண்ணம் மத்திய அரசிடம் இல்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

