அசாமில் மாட்டிறைச்சிக்கு தடை எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
அசாமில் மாட்டிறைச்சிக்கு தடை எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
ADDED : டிச 06, 2024 12:58 AM
புதுடில்லி அசாமில், ஹோட்டல்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள சிறிய உணவகங்களில் மாட்டிறைச்சி விற்க அம்மாநில அரசு விதித்துள்ள தடைக்கு, எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இம்மாநிலத்தில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள சிறிய உணவகங்களில் மாட்டிறைச்சி விற்க மாநில அரசு தடை விதித்துள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சமாஜ்வாதி எம்.பி., இக்ரா ஹஸன் கூறுகையில், “மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அரசு தொடர்ந்து தலையிட்டால் இந்த நாடு சர்வாதிகாரத்தை நோக்கி செல்லும். இதுபோன்ற உத்தரவுகள் அரசியலமைப்புக்கு எதிரானவை,” என்றார்.
சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவை சேர்ந்த எம்.பி., சஞ்சய் ராவத் கூறுகையில், “இந்த நாட்டில் உணவுக்கு தடை விதிக்ககூடாது என்று ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் கூறியுள்ளனர்.
''அசாமில் மாட்டுக்கறிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை, பா.ஜ., ஆளும் கோவா, அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூரில் ஏன் விதிக்கவில்லை?” என, கேள்வி எழுப்பினார்.
கேரள பா.ஜ., துணை தலைவர் மனோஜ் ரவி கூறுகையில், “அசாம் முதல்வர் இந்த உத்தரவை பிறப்பித்து இருக்க கூடாது. இது மக்கள் மத்தியில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு மத கலவரத்துக்கு வழிவகுக்கும். முதலில் மாட்டுக்கறிக்கும், பசுவுக்கும் உள்ள வித்தியாசத்தை அவர் உணர வேண்டும்.
''உணவுக்காக பசுக்கள் வெட்டப்படுவது இல்லை. எருமைகளும், காளைகளுமே உணவுக்காக வெட்டப்படுகின்றன. எதை சாப்பிட வேண்டும் என்பது அவரவர் விருப்பம். அந்த உரிமையில் யாரும் தலையிட முடியாது,” என்றார்.