எதிர்க்கட்சிகளின் அமளி: 3வது நாளாக முடங்கியது பார்லி.,
எதிர்க்கட்சிகளின் அமளி: 3வது நாளாக முடங்கியது பார்லி.,
UPDATED : ஜூலை 24, 2025 01:31 PM
ADDED : ஜூலை 24, 2025 01:11 AM
பீஹாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், பார்லிமென்டில் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் லோக்சபா, ராஜ்யசபா அலுவல்கள் நேற்றும் முற்றிலுமாக முடங்கின.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான நேற்று, வழக்கம்போல் இரு சபைகளும் காலை 11:00 மணிக்கு கூடின.
அப்போது, 'சபை அலுவல்களை ஒத்தி வைத்துவிட்டு, பீஹார் சட்டசபை தேர்தலுக்காக நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும்' என, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கோஷம் எழுப்பினர்.
அவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை; மாறாக, கேள்வி நேரம் துவங்கியது. எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், சபாநாயகர் இருக்கை முன் திரண்டனர்; மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பினர் .
அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா, ''பிரச்னைகளை விவாதிக்கவே இந்த சபை உள்ளது. நீங்களோ, கோஷங்கள் போடும் சபையாக மாற்றுவது ஏற்புடையதல்ல. எந்த பிரச்னை குறித்தும் விவாதிக்க தயார் என அரசு அறிவித்துள்ளது. எனவே, அமைதி காக்க வேண்டும்; இந்த சபையின் மாண்பை காக்க வேண்டும்,'' என்றார்.
எதையும் காதில் வாங்காத எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். இதனால், சபை மதியம் 12:00 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் சபை கூடியபோது, பலத்த அமளிக்கு மத்தியில், தேசிய விளையாட்டு நிர்வாக மசோதாவும், தேசிய போதைப்பொருள் தடுப்பு திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டன.
அப்போதும், எம்.பி.,க்களின் கோஷங்கள் நீடிக்கவே, மதியம் 2:00 மணி வரை சபை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் கூடியபோது ரகளை தொடர்ந்தபடி இருக்கவே, நாள் முழுதும் லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது.
ராஜ்யசபாவிலும் இதே நிலை தொடர்ந்ததால், அங்கும் நேற்று அலுவல் முற்றிலுமாக முடங்கியது.
கருப்பு துண்டு
காலையில், 'இண்டி' கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள் அனைவரும், பார்லிமென்ட் வளாகத்தின் முன் கூடினர். காங்கிரஸ் எம்.பி., ராகுல், சமாஜ்வாதி எம்.பி., அகிலேஷ் உள்ளிட்ட பலரும் கருப்புத் துண்டுகளை தோளில் போட்டு வந்தனர். தி.மு.க., - எம்.பி.,க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். அனைவரும் ஒன்று சேர்ந்து, பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராஜ்யசபாவில் 29ல் விவாதம்
'ஆப்பரேஷன் சிந்துார்' ராணுவ நடவடிக்கை குறித்து, இந்த வாரமே விவாதம் நடத்த வேண்டுமென்ற எதிர்க் கட்சிகளின் கோரிக்கையை, அரசு தரப்பு ஏற்க மறுத்துவிட்டது. இந்த விவாதத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார். அவர் பிரிட்டன் சென்றிருப்பதால், அடுத்த வாரம் விவாதம் நடத்த அரசு தரப்பு ஒப்புக் கொண்டுள்ளது. லோக்சபாவில் இந்த விவாதம் நடத்துவதற்கு, 16 மணி நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ராஜ்யசபாவில் 29ல் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிரிவு உபசார விழாவுக்கு 'நோ'
நேற்று நடந்த ராஜ்யசபா அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தின்போது, 'முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கருக்கு பிரிவு உபசார விழா நடத்த வேண்டும்' என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதை அரசு தரப்பு மறுத்துவிட்டது. மாறாக, இன்றுடன் பதவிக்காலம் முடிவடைய உள்ள தமிழக எம்.பி.,க்கள் ஆறு பேருக்கு, ராஜ்யசபாவில் பிரிவு உபசார அலுவல் நடத்த அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
- நமது டில்லி நிருபர் -

