ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு! வாக்காளர் அட்டை விவகாரத்தில்..
ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு! வாக்காளர் அட்டை விவகாரத்தில்..
ADDED : மார் 18, 2025 04:26 AM

லோக்சபா தொகுதி மறுவரையறை மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் ஒரே பெயரில் வாக்காளர் அடையாள அட்டை வினியோகம் குறித்து விவாதிக்க சபை துணை தலைவர் மறுத்ததை அடுத்து ராஜ்யசபாவில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
ராஜ்யசபா நேற்று கூடியதும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு சட்டவிதி, 267ன் கீழ், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகளை சேர்ந்த, 10க்கும் அதிகமான எம்.பி.,க்கள் நோட்டீஸ் அளித்திருந்தனர்.
திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் சுகேந்து சேகர் ராய், சுஷ்மிதா தேவ் மற்றம் காங்கிரஸ் கட்சியின் பிரமோத் திவாரி உள்ளிட்டோர், ஒரே பெயரில் பல்வேறு மாநிலங்களில் வினியோகிக்கப்பட்டுள்ள போலி வாக்காளர் அட்டை விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தினர்.
தி.மு.க., சார்பில் எம்.பி.,க்கள் வில்சன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ.,வின் சிவதாசன் ஆகியோர் லோக்சபா தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க நோட்டீஸ் அளித்திருந்தனர்.
ஆனால் அந்த நோட்டீசை ஏற்றுக் கொள்ள துணை தலைவர் ஹரிவன்ஷ் மறுத்துவிட்டார். இதையடுத்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர், சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதன் பின், பேசிய அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை, தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்றும், ஒதுக்கப்பட்ட நிதியை குறைக்காமல் பணிகளை விரைந்து நிறைவேற்றும்படி கோரிக்கை விடுத்தார்.
-நமது டில்லி நிருபர்-