ADDED : டிச 04, 2024 01:11 AM
சுராசந்த்பூர், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு கூகி -- மெய்டி பிரிவினரிடையே கடந்த ஆண்டு மே மாதம் இனக்கலவரம் வெடித்தது.
அதன்பின் இயல்புநிலை திரும்பினாலும், அவ்வப்போது தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன. இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களுக்கு, நம் அண்டை நாடான மியான்மரில் இருந்து வரும் ஊடுருவல்காரர்கள் தான் காரணம் என, மாநில அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்நிலையில், ஊடுருவல்காரர்களை தடுக்கும் நோக்கில், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களை ஒட்டியுள்ள மியான்மர் எல்லையில், தடுப்பு முள்வேலிகளை அமைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுஉள்ளது.
இதற்கு, மணிப்பூரில் வசிக்கும் பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பழங்குடியின மக்கள் சார்பில் சுராசந்த்பூரில் நேற்று போராட்டம் நடந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் முள்வேலி அமைக்கும் நடவடிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.