மஹாராஷ்டிராவில் 3வது மொழியாக ஹிந்தி கட்டாயமாக்க வலுக்கும் எதிர்ப்பு
மஹாராஷ்டிராவில் 3வது மொழியாக ஹிந்தி கட்டாயமாக்க வலுக்கும் எதிர்ப்பு
ADDED : ஏப் 18, 2025 06:14 AM

மும்பை: மஹாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக ஹிந்தியை 5ம் வகுப்பு வரை கற்பிக்க முடிவு செய்துள்ள மாநில அரசின் முடிவுக்கு மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு தற்போது மராத்தி மற்றும் ஆங்கில மீடியம் பள்ளிகளில் 1 முதல் 4ம் வகுப்பு வரை இந்த இரு மொழிகளே கட்டாய மொழியாக கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில் தேசிய கல்வி கொள்கை 2020ன் படி வரும் கல்வி ஆண்டு முதல் 5ம் வகுப்பு வரை மும்மொழி கொள்கையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்மொழி திட்டத்தை படிப்படியாக அறிமுகம் செய்ய மஹா., அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி மராத்தி, ஆங்கிலத்துடன் ஹிந்தியை மூன்றாவது மொழியாக கற்பிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. பட்னவிஸ் அரசின் இந்த முடிவுக்கு மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது: ஹிந்தியை 5ம் வகுப்பு வரை கட்டாயமொழி பாடமாக்குவதை பொறுத்துக்கொள்ள மாட்டோம். அனைத்திலும் ஹிந்தி என்ற மத்திய அரசின் முடிவை நாங்கள் அனுமதிக்க முடியாது. ஹிந்தி தேசியமொழி அல்ல. அது நாட்டில் உள்ள மற்ற மொழிகளை போல் ஒரு மாநில மொழியே.
அதை ஏன் மஹாராஷ்டிராவில் தொடக்க கல்வியில் கற்பிக்க வேண்டும். நாங்கள் ஹிந்துக்கள் தான் ஆனால் ஹிந்திக்காரர்கள் அல்ல. மாநிலத்தை ஹிந்தி மயமாக்க விரும்பினால் போராட்டம் வெடிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.