ADDED : மார் 30, 2025 04:08 AM

புதுடில்லி: மோகன்லால் நடிப்பில் வெளியான எல்2: எம்புரான் படம், ஹிந்து விரோத கருத்தை பரப்புவதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
மலையாள நடிகர் மோகன்லால் நடித்த எல்2: எம்புரான் திரைப்படம், கடந்த 27ம் தேதி வெளியானது.
கடந்த 2019-ல் வெளியான லுாசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த படத்தில், வலதுசாரி அரசியலை விமர்சிப்பதோடு, குஜராத் கலவரம் பற்றியும் குறிப்பிடுவதாக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதற்கு விளக்கம் அளித்த படத்தின் திரைக்கதையாசிரியர் கோபி, 'இந்த சர்ச்சையில் நான் எதுவும் பேசாமல் மவுனமாக இருப்பேன்.
'ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் படத்தை பற்றி விளக்குவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்கள் போராட விரும்பினால் போராடட்டும்' என்றார்.
இந்நிலையில், ஹிந்து விரோதம் மற்றும் பா.ஜ., எதிர்ப்பு கருத்துகளை இந்த படம் பரப்புவதாக ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பத்திரிகையான 'ஆர்கனைசர்' கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த பத்திரிகையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த படத்தை, சாதாரணமாக மற்றுமொரு படமாக கடந்து செல்ல முடியாது.
முழுக்க முழுக்க ஹிந்து விரோதம் மற்றும் பா.ஜ., வெறுப்பு கருத்துக்களை பரப்பும் ஊடகமாகவே இந்த படத்தின் காட்சிகள் உள்ளன.
கடந்த 2002-ல் குஜராத்தில் நடந்த கோத்ரா வன்முறைக்கு பிந்தைய சம்பவம் தொடர்பான கருத்தில் நடுநிலைத் தன்மை இல்லை.
கோத்ரா வன்முறைக்கு மூல காரணமான, சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில், 59 ஹிந்துக்கள் கொல்லப்பட்டது பற்றி பேசப்படவில்லை.
மக்களை பிளவுபடுத்தும் எண்ணத்துடனும், அரசியல் ரீதியாக சர்ச்சைக்குரிய வகையிலும் எடுக்கப்பட்டுள்ள ஒரு படத்தில் மோகன்லால் நடித்தது, அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு, அவர் செய்த துரோகம்.
சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில், பொய்யான தகவல்களை கதாசிரியர் கோபி எழுதியுள்ளார். வரலாற்று உண்மைகள் எதையும் அவர் குறிப்பிடவில்லை.
ஏற்கனவே, அரசியல் சார்புக்காக மிகவும் அறியப்பட்ட படத்தின் இயக்குநர் பிரித்வி ராஜ் சுகுமாறன், இந்த படத்தை தன் சொந்த அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி இருக்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.