குழப்பத்தை ஏற்படுத்துவதே எதிர்க்கட்சிகளின் திட்டம்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
குழப்பத்தை ஏற்படுத்துவதே எதிர்க்கட்சிகளின் திட்டம்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
UPDATED : அக் 30, 2026 08:37 PM
ADDED : அக் 30, 2026 08:35 PM

ஆமதாபாத்: குஜராத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நம் நாட்டை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு ஒவ்வொரு இந்தியரும் கடுமையாக உழைத்து வருகின்றனர். ஆனால், எதிர்க்கட்சியினருக்கு இது பிடிக்கவில்லை. நாடு எப்போதும் இக்கட்டான சூழ்நிலையிலேயே இருக்க வேண்டும் என, அவர்கள் விரும்புகின்றனர்.
மேற்காசிய பதற்றங்களால், நாடு ஒருவித நிச்சயமற்ற சூழலை எதிர்கொள்ளும் போது, உரங்கள் மற்றும் சமையல் காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு இருப்பதாக எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு வதந்திகளை பரப்பினர். என் நற்பெயரை கெடுக்கவே அவர்கள் இதை செய்தனர். ஈரான் - அமெரிக்கா போர் இதற்கு ஓர் உதாரணம்.
இது போன்ற சவால்களை நாம் ஒற்றுமையாக எதிர்கொண்டு வரும் வேளையில், வதந்திகளை பரப்புவதிலேயே எதிர்க்கட்சியினர் குறியாக இருந்தனர். உரங்களின் இருப்பு குறித்து விவசாயிகளை தவறாக அவர்கள் வழிநடத்தினர். நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் என்னை பழிவாங்குவதே அவர்களின் திட்டமாக இருந்தது.
சர்வதேச அளவில், 3,000- ரூபாய்க்கு விற்கப்பட்ட யூரியா மூட்டை, நம் விவசாயிகளுக்கு, 300 ரூபாய்க்கு குறைவாகவும், 5,000 ரூபாய்க்கு விற்கப்படும், டி.ஏ.பி., உரம், 1,350- ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. விவசாயமே நாட்டின் கலாசாரம். 10 ஆண்டுகளில் வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்பில் நவீன அறிவியலும், தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு, 26 கோடிக்கும் அதிகமான மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கிராமப்புற பொருளாதாரத்தின் அடித்தளமாக விளங்கும் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத் துறையில் பெண்களின் பங்களிப்பு அளப்பரியது.
2001 அக்., 7ல், குஜராத் முதல்வராக முதன்முறை பதவியேற்றேன். கடந்த 7- உடன், அரசு தலைமைப் பொறுப்பில், 25 ஆண்டுகளை நிறைவு செய்தேன். ஆனால், என் மீது நீங்கள் காட்டும் அன்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என் கடைசி மூச்சு உள்ளவரை நாட்டு மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றுவேன். இவ்வாறு அவர் பேசினார்.
