மாநில அரசு பணியிடங்களுக்கு வயது வரம்பு தளர்த்தி உத்தரவு
மாநில அரசு பணியிடங்களுக்கு வயது வரம்பு தளர்த்தி உத்தரவு
ADDED : அக் 15, 2024 12:23 AM
பெங்களூரு : அடுத்தாண்டு நடக்கும் மாநில அரசு பணியிடங்களுக்கு, அனைத்து தரப்பினருக்கும் வயது வரம்பில், அடுத்தாண்டிற்கு மட்டும் 3 வயது தளர்வு அளித்து, கர்நாடக அரசு நேற்று உத்தரவிட்டது.
கர்நாடக அரசு பணியிடங்கள் நியமன தேர்வில், மத்திய அரசின் யு.பி.எஸ்.சி., போன்று சீர்திருத்தம் கொண்டு வரும்படி, சமீபத்தில், அதிகாரிகளுக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.
மாநிலத்தில் தற்போது அரசு பணியிடங்களில் இணைவதற்கு குறைந்தபட்ச வயது, 21ஆக இருக்கிறது. அதிகபட்ச வயதாக பொது பிரிவினருக்கு, 35 வயது; பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 38 வயது; எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு, 40 வயது; விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, 45 வயதாக இருக்கிறது.
இதற்கிடையில், இந்தாண்டு பல்வேறு பணியிடங்களுக்கு அரசு தேர்வு நடத்தப்படவில்லை. கர்நாடகாவில், 34,000க்கும் அதிகமான அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்நிலையில், அடுத்தாண்டு நடக்கும் அனைத்து அரசு பணியிடங்களுக்கான தேர்வில், அதிகபட்ச வயது வரம்பில் 3 வயது தளர்வு வழங்கி, நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதாவது அடுத்தாண்டு மட்டும் பொது பிரிவினருக்கு, 36 வயது; பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 39 வயது; எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 43 வயது; விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, 48 வயதாக இருந்தாலும் அரசு பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வை எழுத முடியும்.