கவிதாவின் புதிய கட்சி பதிவு விரைந்து முடிவெடுக்க உத்தரவு
கவிதாவின் புதிய கட்சி பதிவு விரைந்து முடிவெடுக்க உத்தரவு
ADDED : மார் 20, 2026 05:55 AM

தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா துவக்கியுள்ள தெலுங்கானா ஜாக்ருதி என்ற புதிய கட்சியை பதிவு செய்வது தொடர்பாக விரைவாக முடிவெடுக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானாவின் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறி கடந்த ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து, கவிதா நடத்தி வந்த தெலுங்கானா ஜாக்ருதி என்ற கலாசார அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றும் பணியில் அவர் ஈடுபட்டார். கட்சியை பதிவு செய்ய தேர்தல் கமிஷனில் விண்ணப்பித்து இருந்தார்.
அந்த விண்ணப்பத்தின் மீது நீண்ட நாட்களாக எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, டில்லி உயர் நீதிமன்றத்தில் கவிதா வழக்கு தொடர்ந்தார்.
மனுவை நேற்று விசாரித்த நீதிபதி அமித் பன்சால், அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடைமுறையில் தேவையற்ற காலதாமதம் இருக்கக்கூடாது.
மனுதாரரின் விண்ணப்பத்தைப் பரிசீலித்து, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைவாக முடிவெடுக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டார்.
- டில்லி சிறப்பு நிருபர் -

