ADDED : மார் 31, 2026 04:52 AM
புதுடில்லி: மேற்காசியாவில் நடக்கும் போரால், எரிபொருள் வினியோகம் தடைபட்டுள்ளது. இதனால், நம் நாடு உட்பட உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், மண்ணெண்ணெய் வினியோகத்தை தற்காலிகமாக வழங்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு:
மண்ணெண்ணெய் பயன்படுத்தாத டில்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உட்பட, 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொது வினியோக திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில், 60 நாட்களுக்கோ அல்லது மறு அறிவிப்பு வரும் வரையோ மண்ணெண்ணெய் வினியோகிக்கப்படும்.
பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் பாதுகாப்பு அமைப்பால் வெளியிடப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகளின்படி, அந்தந்த மாநில அரசுகளால் தேர்ந்தெடுக்கப்படும் பெட்ரோல் பங்க்குகளிலும் மண்ணெண்ணெயை வினியோகிக்கலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், அதிகபட்சம் இரண்டு பெட்ரோல் பங்க்குகளை தேர்வு செய்து, அங்கு தலா, 5,000 லிட்டர் வரை மண்ணெண்ணெய் இருப்பு வைத்து வினியோகிக்கலாம்.
இதற்காக, மாநிலங்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் அளவை விட, கூடுதலாக, 48,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
