காலநிலை மாற்ற கட்டுப்பாடுகள் தெரியப்படுத்த உத்தரவு
காலநிலை மாற்ற கட்டுப்பாடுகள் தெரியப்படுத்த உத்தரவு
ADDED : டிச 15, 2024 12:55 AM
சபரிமலை:காலநிலை மாற்றத்தால் சபரிமலையில் ஏற்படுத்தப்படும் கட்டுப்பாடுகள் குறித்து பக்தர்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும் என பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சபரிமலை விவகாரங்களை கவனிக்கும் கேரள உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், முரளி கிருஷ்ணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பக்தர்களை ஏற்றி வருவதற்காக பார்க்கிங் கிரவுண்டில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளதை அனுமதிக்க முடியாது. இப்படிப்பட்ட வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்,' என்றனர்.
அப்போது பத்தனம்திட்டா எஸ்.பி. சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இது தொடர்பாக 10 தனியார் வாகன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்,' கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இது தொடர்பாக மீண்டும் திங்கள் கிழமை விசாரணை நடைபெறும் என்றனர்.
பத்தனம்திட்டா கலெக்டர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,'மாவட்டத்தில் சிவப்பு எச்சரிக்கை உள்ளதால் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது,' என்றார். பம்பை நதிக்கரையில் கூடுதல் மத்திய அதிரடிப்படை வீரர்களும் , பேரிடர் தடுப்பு நிவாரண படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு ஏற்படுத்தப்படும் கட்டுப்பாடுகள் குறித்து பக்தர்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.