விபத்தில் காயம் அடைந்தவருக்கு ரூ.22 லட்சம் வழங்க உத்தரவு
விபத்தில் காயம் அடைந்தவருக்கு ரூ.22 லட்சம் வழங்க உத்தரவு
ADDED : அக் 26, 2025 02:03 AM
புதுடில்லி: சாலை விபத்தில் ஊனம் அடைந்த ஹோட்டல் மேலாளருக்கு, 22.33 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
புதுடில்லி ஹோட்டல் ஒன்றில் மேலாளராக பணியாற்றியவர் பிரசாந்த் ஜோஷி. கடந்த, 2019ம் ஆண்டு ஏப்., 3ம் தேதி பைக்கில் சென்றார். அதிவேகமாக வந்த கார், பைக் மீது மோதியது. தூக்கி வீசப்பட்ட ஜோஷி பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரு கால்களிலும் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு, 65 சதவீத ஊனம் அடைந்தார்.
இது தொடர்பாக வழக்கு, மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் நடந்தது வழக்கை விசாரித்த தீர்ப்பாய தலைவர் ஷெல்லி அரோரா பிறப்பித்த உத்தரவு:
விபத்தில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக மனுதாரர் ஜோஷி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடும் அதிர்ச்சியை சந்தித்துள்ளார். காயம் அடைந்தவர்களின் வலி மற்றும் துன்பத்தை அளவிட முடியாது. அவர் அனுபவித்த வேதனைக்கு பணத்தின் அடிப்படையில் ஈடுசெய்ய இந்த நிவாரணம் அறிவிக்கப்படுகிறது. இரு கால்களும் பாதிக்கப்பட்டு எதிர்காலத்தை இழந்த ஜோஷிக்கு, 22.33 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை, காப்பீட்டு நிறுவனமான - டாடா ஏ.ஐ.ஜி., ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

