அமைச்சர் கபில் மிஸ்ரா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு
அமைச்சர் கபில் மிஸ்ரா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு
ADDED : ஏப் 01, 2025 09:21 PM
புதுடில்லி:டில்லியில் 2020ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக, டில்லி சட்டத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக, வடகிழக்கு டில்லியில் 2020ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி நடந்த போராட்டத்தின் போது, கலவரம் வெடித்தது. இதில், 53 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து, யமுனா விஹாரைச் சேர்ந்த முஹமது இலியாஸ் என்பவர், டில்லி பெருநகர கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு:
வடகிழக்கு டில்லியில் 2020ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி நடந்த கலவரத்தில் பா.ஜ.,வைச் சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாக்குர், பர்வேஷ் வர்மா மற்றும் அபய் வர்மா உள்ளிட்டோருக்கு முக்கியப் பங்கு உள்ளது.
கலவரத்தைத் தூண்டும் வகையிலும், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இவர்கள் பேசினர். அதேபோல பா.ஜ., - எம்.எல்.ஏ., மோகன் சிங் பிஷ்ட், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஜகதீஷ் பிரதான் மற்றும் சத்பால் சன்சாத் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேகோரிக்கையுடன் மற்றொரு பொதுநல வழக்கு, டில்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், டில்லி பெருநகர கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் வைபவ் சவுராசியா முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'இந்தக் கலவரத்துக்கும் கபில் மிஸ்ராவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பது விசாரணையில் தெளிவாகியுள்ளது. எனவே, அவர் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை'என கூறப்பட்டது.
மாஜிஸ்திரேட் வைபவ் சவுராசியா பிறப்பித்த உத்தரவு:
கலவரம் நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் கபில் மிஸ்ரா இருந்தார் என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, மிஸ்ரா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கில் அடுத்த விசாரணை வரும் 16ம் தேதி நடத்தப்படும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவால் கபில் மிஸ்ராவின் அமைச்சர் பதவிக்கு பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்பார்த்த நிலையில், அதற்கு வாய்ப்பு இல்லை; இந்த வழக்கை சட்டப்படி மிஸ்ரா எதிர்கொள்வார் என பா.ஜ., வட்டாரங்கள் கூறின.

