நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம சுரங்கம் ஏல ஒப்பந்த கடிதத்தை நிறுத்தி வைக்க உத்தரவு
நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம சுரங்கம் ஏல ஒப்பந்த கடிதத்தை நிறுத்தி வைக்க உத்தரவு
ADDED : டிச 25, 2024 03:03 AM
புதுடில்லி, மதுரை நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம தொகுதியில், விருப்ப ஒப்பந்ததாரருக்கு ஒப்புதல் கடிதம் வழங்கும் நடைமுறையை தற்போதைக்கு நிறுத்தி வைக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், சுரங்கம் அமையும் இடத்தை மறு ஆய்வு செய்யும்படியும் இந்திய புவியியல் ஆய்வு அமைப்புக்கு அறிவுறுத்தியுள்ளது.
சட்ட திருத்தம்
கடந்த, 1957ல் இயற்றப்பட்ட சுரங்கங்கள், கனிமங்கள் மேம்பாடு ஒழுங்குமுறை சட்டத்தில், 2023ல் மத்திய அரசு திருத்தம் செய்தது.
அதன்படி, முக்கியமான கனிம சுரங்கங்களின் குத்தகை மற்றும் கூட்டு உரிமங்களை ஏலம் விடும் அதிகாரம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. முக்கிய கனிமங்களில் ஒன்றாக டங்ஸ்டன் கனிமம் உள்ளது.
இந்த திருத்தத்தின் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் உள்ள நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி உட்பட தமிழகத்தின் முக்கிய கனிம தொகுதிகளை ஏலம் விடுவது குறித்து 2023, செப்டம்பரில் தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது.
இதற்கு, 2023, அக்டோபரில் பதில் அளித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர், பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்தத்தை கேள்விக்குள்ளாக்கியதுடன், முக்கியமான கனிமங்களை ஏலம் விடும் அதிகாரம் மாநில அரசுகளிடமும் இருக்க வேண்டும் எனக் கோரினார்.
நாயக்கர்பட்டியில் ஏலம் விடப்படவுள்ள 193.215 ஹெக்டேர் பரப்பளவில் 10 சதவீதம் பல்லுயிர் தளமாக இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும், ஏலத்திற்கு எதிரான பரிந்துரை அளிக்கவில்லை.
இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களின் 24 தொகுதிகளின் ஏலத்தை மத்திய சுரங்க அமைச்சகம் இதுவரை நான்கு கட்டங்களாக நடத்தி உள்ளது.
மதுரை மாவட்டத்தில் 20.16 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உடைய நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி, 2024 பிப்ரவரியில் கூட்டு உரிமமாக ஏலத்திற்கு முன்மொழியப்பட்டது.
பாரம்பரிய தளம்
பின், 2024, ஜூன் மாதத்தில் இரண்டாவது முயற்சியாக மீண்டும் ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டது. 2024, நவம்பரில், 'ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்' நிறுவனம் விருப்ப ஏலதாரராக அறிவிக்கப்பட்டது.
இந்த கனிம தொகுதி ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து ஏல முடிவு அறிவிக்கப்படும் வரை அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்ற தமிழக அரசு, எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.
நாட்டின் முக்கியமான கனிமங்களை ஏலம் விடுவதுடன் மத்திய அரசின் பணி முடிந்துவிடுகிறது. அதன்பின், விருப்ப கடிதம் வழங்குதல், கூட்டு உரிமம், சுரங்க குத்தகை உள்ளிட்டவை மாநில அரசுகளால் மேற்கொள்ளப்படுகின்றன.
உற்பத்தி துவங்கியதும் கிடைக்கும் வருவாய் மாநில அரசையே சேரும்.
நாயக்கர்பட்டி கனிம தொகுதியில் உள்ள பல்லுயிர் பாரம்பரிய தளத்தை காரணம் காட்டி ஏலம் விட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கனிம சுரங்கம் அமையும் பகுதியை மறு ஆய்வு செய்து, பல்லுயிர் தளப் பகுதியை நீக்கி, பகுதியை மறுவரையறை செய்யும்படி, ஜி.எஸ்.ஐ., எனப்படும், மத்திய புவியியல் ஆய்வு அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
எனவே, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம தொகுதியில், விருப்ப ஒப்பந்ததாரருக்கான ஒப்புதல் கடிதம் வழங்கும் நடைமுறையை தற்போதைக்கு நிறுத்தி வைக்கும்படி தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டு உள்ளது.