UPDATED : நவ 22, 2026 06:56 PM
ADDED : நவ 22, 2026 06:56 PM
டில்லி மற்றும் அண்டை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேச அரசுகளுக்கு, மத்திய காற்று தர மேலாண்மை ஆணையம் பிறபித்துள்ள உத்தரவு:
டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுக்குள் கொண்டுவர, 2027-ம் ஆண்டுக்கான செயல் திட்டங்களை நான்கு மாநில அரசுகளும் உருவாக்க வேண்டும். மாவட்ட அளவில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாவட்ட அளவில் மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்தினால் மட்டுமே கண்காணிக்க எளிதாக இருக்கும்
மேலும், இந்த திட்டங்களை அமல்படுத்துவதில் உள்ள குறைகளைக் கண்டறிந்து, மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். காற்று மாசை கட்டுக்குள் கொண்டுவர, ‘ஏர்ஷெட்’ எனப்படும்- காற்று மண்டலப் பகுதி அடிப்படையில் தொடர்ச்சியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மிகவும் அவசியம். எனவே, மாநில மற்றும் மாநகராட்சி அளவிலான திட்டங்களுக்கு மாற்றாக, 2027-ஆம் ஆண்டுக்கான செயல் திட்டங்களில் மாவட்ட அளவிலான நடவடிக்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
அதேபோல, இந்த திட்டத்தில் துறை வாரியான நடவடிக்கைகள், இலக்குகள், காலக்கெடு மற்றும் கண்காணிப்பு அளவீடுகள் ஆகியவை தெளிவாக இருக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளால், காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்துவதையும், 2026-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஆண்டு சராசரி காற்று மாசை 15 முதல் 20 சதவீதம் வரை குறைப்பதையும் நோக்கமாக கொண்டு திட்டங்களை உருவாக்க வேண்டும்.
வாகனங்கள், சாலைகளில் உருவாகும் தூசி, தொழிற்சாலைகளில் உருவாகும் புகை, கட்டுமான மற்றும் கட்ட இடிப்புகள், குப்பைகளை அகற்றுதல், பயிர்க் கழிவுகளை அப்புறப்படுத்துதல், டீசல் ஜெனரேட்டர் பயன்பாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
திட்ட இலக்குகளை அடைவதற்கு, பொறுப்பான அதிகாரிகளை நியமித்து, அவர்களின் பெயர் மற்றும் பதவி தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். இதன் மூலம், திட்டத்தை செயல்படுத்துவதிலும், இலக்கை அடைவது உறுதி செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
