ADDED : அக் 13, 2024 11:13 PM

பெலகாவி: பெலகாவி சவதத்தியின் பிரசித்தி பெற்ற ரேணுகா எல்லம்மா கோவிலுக்கு, முதல்வர் சித்தராமையா வருகை தந்தார். தன் மனைவி பார்வதி பெயரில் அர்ச்சனை செய்தார்.
முதல்வர் சித்தராமையா, மைசூரில் நேற்று முன்தினம் தசரா நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரவு மைசூரில் இருந்த முதல்வர், நேற்று பெலகாவி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
சவதத்தியின் வரலாற்று பிரசித்தி பெற்ற ரேணுகா எல்லம்மா கோவிலுக்கு சென்றார். அம்பாளை தரிசனம் செய்தார். தன் மனைவி பார்வதி பெயரில் அர்ச்சனை செய்தார். அர்ச்சனை நிறைவு பெறும் வரை, மூலஸ்தானத்தில் பக்தியுடன் நின்றிருந்தார். அர்ச்சனை தட்டில், 500 ரூபாய் போட்டார்.
குங்குமத்தை எடுத்து தன் நெற்றியில் இட்டுக் கொண்டார். அப்போது துணை முதல்வர் சிவகுமார் உட்பட, கட்சி பிரமுகர்கள் இருந்தனர். இதே நேரத்தில் அர்ச்சகர்களின் ஊதியத்தை உயர்த்தும்படி, கோவிலின் அர்ச்சகர்கள் வேண்டுகோள் விடுத்தனர். சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பேசுவதாக முதல்வர் உறுதி அளித்தார்.
ரேணுகா எல்லம்மாவை தரிசித்தபின், சவதத்தியில் புதிதாக கட்டப்பட்ட விருந்தினர் இல்லத்தை முதல்வர் திறந்து வைத்தார். அதன்பின், சுற்றுலாத் துறை அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தினார். இந்த வேளையில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.