நேரடி 'தத்கால் டிக்கெட்' பெற விரைவில் வருகிறது ஓ.டி.பி.,
நேரடி 'தத்கால் டிக்கெட்' பெற விரைவில் வருகிறது ஓ.டி.பி.,
ADDED : டிச 04, 2025 01:06 AM

புதுடில்லி: ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள 'கவுன்டர்'களில் நேரடியாக, 'தத்கால் டிக்கெட்' வாங்குபவர்களின் மொபைல் போனுக்கு, ஓ.டி.பி., எனப் படும் ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் வழங்கும் முறையை அறிமுகப்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
திடீர் பயணங்களை மேற்கொள்பவர்களின் வசதிக்காக, ரயில் புறப்படும் முந்தைய நாள் காலையில் தத்கால் முறைப்படி, பயணியர் டிக்கெட்டுகளை பதிவு செய்ய முடியும்.
கடந்த ஜூலை முதல், ஆன்லைன் வாயிலாக தத்கால் டிக்கெட் பெறும் பயணியர், ஆதார் எண்ணை வழங்கி அத்துடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் போனுக்கு வரும் ஓ.டி.பி., எண்ணை வைத்து தங்களுக்கான டிக்கெட்டுகளை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், ரயில் நிலைய கவுன்டர்களில் சென்று டிக்கெட் பெறுபவர்களுக்கும், ஓ.டி.பி., வழங்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. கடந்த 17ம் தேதி முதல், ஒரு சில ரயில்வே ஸ்டேஷன்களில், சோதனை முறையில் இது செயல் படுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
தத்கால் முறை முன்பதிவில் மோசடியைத் தவிர்க்க, பயணியருக்கு ஓ.டி.பி., எண் வழங்கும் முறை சோதனை முறையில் துவங்கப்பட்டுள்ளது. இந்த முறைப்படி, தத்கால் டிக்கெட் பெற விரும்பும் பயணியின் மொபைல் போனுக்கு ஓ.டி.பி., அனுப்பப்படும்.
அதை, கவுன்டரில் உள்ள அலுவலரிடம் கூறினால் மட்டுமே, டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். வட மாநிலங்களில் ஒரு சில இடங்களில் துவங்கப்பட்ட ஓ.டி.பி., நடைமுறை விரைவில் நாடு முழுதும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

