நம் ஆயுதப்படைகள் மிக சிறந்தவை: விமானப்படை தளபதி பெருமிதம்
நம் ஆயுதப்படைகள் மிக சிறந்தவை: விமானப்படை தளபதி பெருமிதம்
ADDED : ஜன 15, 2024 12:35 AM

புதுடில்லி: ''உலகின் மிகச்சிறந்த படைகளில் ஒன்றாக, நம் ஆயுதப் படைகள் உள்ளன. மேலும், முழு அளவிலான போர் முறையின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், காலத்திற்கேற்ப நம் ஆயுதப் படைகள் மாறியுள்ளன,'' என, இந்திய விமானப் படையின் தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ராணுவ வீரர்களின் தன்னலமற்ற கடமை மற்றும் தியாகத்தை நினைவுகூரும் வகையில், கடந்த ஏழு ஆண்டுகளாக, ஜன., 14ம் தேதி, ஆயுதப் படை வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி, தலைநகர் புதுடில்லியில் நேற்று நடந்த எட்டாவது ஆயுதப் படை வீரர்கள் தினத்தில், நம் விமானப் படையின் தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி பேசியதாவது:
இந்த நாளில், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அனைத்து வீரர்களையும் நினைவுகூர்வோம்; அவர்களது குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருப்போம். முன்னாள் வீரர்களின் நெகிழ்ச்சியான மனப்பான்மை, தலைமைத்துவம், தொலைநோக்கு பார்வை ஆகியவை தற்போது நம் படைகளுக்கு அடித்தளத்தை அமைத்துள்ளன.
உலகின் மிகச்சிறந்த படைகளில் ஒன்றாக நம் ஆயுதப் படைகள் உள்ளன. மேலும், முழு அளவிலான போர்களின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், மாறி வரும் காலத்துக்கேற்ப நம் ஆயுதப் படைகள் மாறி உள்ளன.
கடந்த, 90 ஆண்டுகளுக்கு முன், சாதாரண விமானப் படையாக இருந்த நம் விமானப் படை, தற்போது உலகின் மிகவும் வலிமையான விமானப் படைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. பல ஆண்டுகளாக விமானப் படை வீரர்கள் வழங்கிய தொடர்ச்சியான முயற்சி மற்றும் சேவையால் இது சாத்தியமானது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில், கடற்படை தலைமை தளபதி ஆர்.ஹரி குமார், முப்படைகளின் பல்வேறு மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.