தொழில்நுட்பம், கல்வித்துறையில் முன்னேறும் பாரதம்: விஜயதசமி விழாவில் மோகன் பகவத் பெருமிதம்
தொழில்நுட்பம், கல்வித்துறையில் முன்னேறும் பாரதம்: விஜயதசமி விழாவில் மோகன் பகவத் பெருமிதம்
UPDATED : அக் 12, 2024 09:55 AM
ADDED : அக் 12, 2024 09:47 AM

மும்பை: 'ஆர்.எஸ்.எஸ்., 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும், இந்த ஆண்டு முக்கியமானது. நமது நாடு தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறைகளில் முன்னேறி வருகிறது' என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசினார்.
மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் விஜயதசமியை முன்னிட்டு, ஆர்.எஸ்.எஸ்., நடத்திய நிகழ்ச்சியில் தலைவர் மோகன் பகவத் மற்றும் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், மோகன் பகவத் பேசியதாவது: ஆர்.எஸ்.எஸ்., 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த ஆண்டு முக்கியமானது. மக்களின் குணநலன்களை பொறுத்து ஒரு நாடு மகத்தானதாக மாறும்.

இஸ்ரேல்- ஹமாஸ் போர் கவலை அளிக்கிறது. இதனால் அண்டை நாடுகளுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அனைவரும் கவலைப்படுகிறார்கள். நமது அண்டை நாடான வங்கதேசத்தில் என்ன நடந்தது? அதற்கு சில உடனடி காரணங்கள் இருக்கலாம், ஆனால் சம்பந்தப் பட்டவர்கள் அதைப் பற்றி விவாதிப்பார்கள். ஆனால், அந்த குழப்பத்தால், ஹிந்துக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் அங்கு மீண்டும் மீண்டும் நிகழ்ந்தன.

உதவி செய்யுங்கள்
ஹிந்துக்கள் மட்டுமல்ல, அனைத்து சிறுபான்மையினரும் ஆபத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும். நாம் எங்கிருந்தாலும் அட்டூழியத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். சூழ்நிலைகள் சில சமயங்களில் சவாலாகவும், சில சமயங்களில் நல்லதாகவும் இருக்கும். மனித வாழ்க்கை முன்பை விட பொருள் ரீதியாக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இந்த மகிழ்ச்சியான நேரத்தில் பல போராட்டங்கள் தொடர்வதை நாம் காண்கிறோம்.

முன்னேற்றம்
கடந்த சில ஆண்டுகளாக, உலகில் பாரதம் வலிமையாகவும், மதிக்கப்படுவதாகவும் அனைவரும் உணர்கிறார்கள்.இந்தியாவின் கவுரவமும், புகழும் உலகளவில் அதிகரித்துள்ளது. நமது நாடு தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறைகளில் முன்னேறி வருகிறது. இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. சமூகத்தில் புரிதலும் படிப்படியாக வளர்ந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றதை பார்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

