எங்கள் தலைவர் ராகுல் அல்ல காங்., இக்பால் அன்சாரி அதிரடி
எங்கள் தலைவர் ராகுல் அல்ல காங்., இக்பால் அன்சாரி அதிரடி
ADDED : நவ 11, 2024 05:27 AM

கொப்பால்: ''முதல்வர் சித்தராமையா, எங்கள் தலைவர். சோனியா, ராகுல் எங்கள் தலைவர் அல்ல,'' என காங்கிரசின் முன்னாள் அமைச்சர் இக்பால் அன்சாரி தெரிவித்தார்.
கொப்பால் நகரின், சாஹித்ய பவனில் இந்தியா கண்ட சுதந்திர போராட்டக்காரர்கள் ஜெயந்தோற்சவ நிகழ்ச்சியில், இக்பால் அன்சாரி பேசியதாவது:
ராகுல், சோனியாவை எங்கள் தலைவர் என, நான் ஒப்புக்கொள்ளவில்லை. முதல்வர் சித்தராமையா மட்டுமே எங்கள் தலைவர். என்னை எம்.எல்.ஏ.,வாக்கியது, அமைச்சராக்கியது அவர்தான். அவர் இருக்கும் வரை, நாங்கள் பிழைக்க முடியும்.
அவர் பதவியில் இருக்கும் போதே, எங்களுக்கு தேவையானதை செய்து கொள்ள வேண்டும். அவர் போய்விட்டால் எங்களுக்கு சொம்புதான் கிடைக்கும்.
எங்கள் சமுதாயத்தினர், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, முதல்வரை சந்திக்க வேண்டும். 100 கோடி ரூபாய் நிதியுதவி பெற்று, சமுதாயத்தின் மேம்பாட்டு பணிகளை செய்ய வேண்டும்.
எம்.எல்.ஏ., ராகவேந்திர ஹிட்னாலை, மாவட்ட பஞ்சாயத்து தலைவராக்கினேன். அவர் எம்.எல்.ஏ.,வாக உழைத்தேன். நான் அவரை விட சிறியவன். ராகவேந்திர ஹிட்னாலின் தொகுதியில், தொழிற்சாலைகள் உள்ளன. ஒருவருக்கு வேலை தாருங்கள் என, நான் கேட்டு கொண்டேன். ஆனால் அவர் வேலை வாங்கித்தரவில்லை.
வக்பு சொத்துகள் தொடர்பாக, பா.ஜ.,வினர் கூறும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. அமைச்சர் ஜமீர் அகமது கான் மூலமாக, முதல்வர் சித்தராமையா வக்பு சொத்துக்காக நோட்டீஸ் கொடுக்க வைப்பதாக குற்றம்சாட்டுவது பொய்யானது.
கர்நாடகாவை மற்றொரு பாகிஸ்தான் ஆக்க முயற்சி நடப்பதாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் குற்றம்சாட்டுகிறார். கர்நாடகாவில் முஸ்லிம்கள், மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். ஆனால் எங்கள் சமுதாயத்தினர், பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியது இல்லை. எத்னாலின் பேச்சால் இளைஞர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். நாங்கள் இங்கு பிறந்தோம்; இங்கேயே சாவோம்.
இவ்வாறு அவர்பேசினார்.