மக்களுக்குச் சேவையாற்றுவதே நமது முதன்மையான பணி; பிரதமர் மோடி உறுதி
மக்களுக்குச் சேவையாற்றுவதே நமது முதன்மையான பணி; பிரதமர் மோடி உறுதி
ADDED : செப் 24, 2026 10:17 AM

புதுடில்லி: மக்களுக்குச் சேவையாற்றுவதே நமது முதன்மையான பணியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பொது வாழ்வில் பிரதமர் மோடி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, பாஜ சார்பில் 'சேவா சங்கல்ப் அபியான்' திட்டத்தின் ஒரு பகுதியாக மோட்டார் சைக்கிள் யாத்திரை கடந்த செப்டம்பர் 17ம் தேதி துவங்கியது. குஜராத்தின் வாட்நகரில் இருந்து வாரணாசி வரை பயணிக்கும் 10 குழுக்களைச் சேர்ந்த சேவா யாத்திரீகர்களுடன் பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பேசியதாவது:
இந்த சேவா யாத்ரீகர்கள், வத்நகரிலிருந்து வாரணாசி வரை 10 குழுக்களாக இருசக்கர வாகனப் பேரணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த யாத்திரை அடிமட்ட அளவில் பொதுமக்களுடனான தொடர்பு, இளைஞர்களின் ஈடுபாடு, சமூக நலன் மற்றும் கலாசார ரீதியான உறவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நற்காரியம்
எவ்வளவு உயர்ந்த அதிகாரத்தையோ அல்லது பதவியையோ அடைந்தாலும், எங்கள் பாதை எப்போதும் சேவையை நோக்கியதாகவே இருக்கும் என்பதை எங்கள் நடத்தை வெளிப்படுத்த வேண்டும். சேவை குறித்து வெறும் உபதேசம் செய்வதை விடுத்து, சேவையாற்றுவதன் மூலமே நமது நோக்கத்தை எடுத்துரைக்க வேண்டும்; உங்கள் பயணத்தின்போது மக்களுக்குச் சேவையாற்றுவதன் மூலம் நீங்கள் ஒரு நற்காரியத்தைச் செய்கிறீர்கள்.
சேவை ஆற்றுங்கள்!
மக்களுக்குச் சேவையாற்றுவதே நமது முதன்மையான பணியாக இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் கூற விரும்புகிறேன்; சேவை குறித்து வெறும் உபதேசம் செய்யத் தேவையில்லை. சேவை குறித்த செய்தியை வெறும் வார்த்தைகள் மூலம் அல்ல, மாறாகச் சேவையாற்றுவதன் மூலமே நாம் வெளிப்படுத்துவோம்.
2047க்குள்!
நாட்டை உருவாக்கும் இலக்கோடு நாம் களமிறங்கியுள்ளோம். வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் உறுதியுடன் நாம் பயணிக்கிறோம். 2047ம் ஆண்டிற்க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில், இளைஞர்களின் மிக முக்கியப் பங்கை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினர் வளர்ந்த இந்தியாவை உருவாக்குபவர்களாக மட்டுமல்லாமல், அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பயனடைபவர்களாகவும் இருப்பார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
